2017-07-22 16:20:00

இலங்கையில் சிறுபான்மை மதத்தவர் புறக்கணிக்கப்படக் கூடாது


ஜூலை,22,2017. இலங்கையின் புதிய அரசியலைமப்பில், புத்த மதம் முக்கிய  மதமாக அமைந்திருக்கும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் அண்மையில் கூறியுள்ளவேளை, அந்நாட்டின் சிறுபான்மை மதத்தவர் புறக்கணிக்கப்படக் கூடாது என, பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையின் புதிய அரசியலைமப்பில், புத்த மதத்திற்கு சிறப்பு மதிப்பு வழங்கப்படவில்லையெனில், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அச்சுறுத்திய, ஏறக்குறைய எழுபது தீவிரவாத புத்தமதத் துறவிகளிடம் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள், இவ்வாறு உறுதியளித்தார்.

இது குறித்து ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, யாழ்ப்பாணத்தின் ஆங்லிக்கன் குரு சாமுவேல் பொன்னையா அவர்கள், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களை வெளியிட உரிமை உள்ளது என்றும், தாங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என சிறுபான்மை மதத்தவர் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் இவ்வறிவிப்பு குறித்துப் பேசிய மெத்தடிஸ்ட் சபையினர், இலங்கையில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர் புத்த மதத்தவராக உள்ளனர் என்றாலும், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ளனர், இலங்கை, சமயச் சார்பற்ற நாடாக இருந்தால் மட்டுமே, சமத்துவமும் ஒற்றுமையும் நிலவும் எனக் கூறினர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.