2017-07-20 15:45:00

செல்வம் மிக்க நைஜீரியாவில் பெண்கல்வியின் வறுமை


ஜூலை,20,2017. ஆப்ரிக்க நாடுகள் அனைத்திலும், நைஜீரியா, மிகுந்த செல்வம் மிக்க நாடாக இருந்தாலும், இந்நாட்டில், பள்ளிக்குச் செல்லாத பெண் குழந்தைகள் மிக அதிக அளவில் உள்ளனர் என்று, UNICEF நல்லெண்ணத் தூதராகப் பணியாற்றும் மலாலா யூசப்சாய் அவர்கள் கூறியுள்ளார்.

உலகெங்கும் பெண் கல்விக்கெனப் போராடிவரும், பாகிஸ்தான் இளம்பெண், மலாலா அவர்கள், நைஜீரியாவில் மேற்கொண்டுள்ள பயணத்தின்போது, பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

பெண்களுக்குக் கல்வி புகட்டுவதன் வழியே, ஒரு நாட்டின் பொருளாதாரம் உயரும், மோதல்கள் குறையும், மக்களின் நலவாழ்வு மேம்படும் என்பதால், நைஜீரியா நாட்டில், பெண் கல்வியை, அரசு தன் முதன்மையான இலக்காகக் கொண்டு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று மலாலா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

2009ம் ஆண்டு போகோ ஹாராம் தீவிரவாதக் குழு தன் வன்முறைகளைத் துவக்கியத்திலிருந்து, நைஜீரியா நாட்டில், 1400 பள்ளிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன, 2,295 ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் 19,000த்திற்கும் அதிகமானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று, UNICEF அறிக்கையொன்று கூறுகிறது.

பாகிஸ்தானில் பிறந்து, பெண் கல்விக்காகப் போராடிவந்த பள்ளி மாணவி, மலாலா அவர்கள், 15வது வயதில், தீவிரவாதிகளால் குண்டடிபட்டு, உயிர் பிழைத்து, இன்று உலகெங்கும் பெண் கல்விக்கென உழைத்து வருகிறார். இவருக்கு உலக அமைதிக்கென வழங்கப்படும் நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.