2017-07-18 14:39:00

இனவெறியின் அனைத்து முறைகளையும் விலக்கி நடக்க...


ஜூலை,18,2017. “இனவெறியின் அனைத்து முறைகளையும், சகிப்பற்றதன்மை மற்றும், மனிதர் பொருளாகப் பயன்படுத்தப்படுவதையும், நாம் விலக்கி நடக்க வேண்டும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை,18, இச்செவ்வாயன்று, உலக நெல்சன் மண்டேலா தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, இவ்வாறு தன் டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவராகிய நெல்சன் மண்டேலா அவர்கள், அமைதி மற்றும் சுதந்திரக் கலாச்சாரத்திற்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2009ம் ஆண்டு நவம்பரில், ஜூலை 18ம் தேதியை, உலக நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது எனச் சொல்லப்பட்டுள்ளது.  

மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்கென, தனது 67 வருட வாழ்வை அர்ப்பணித்த, நெல்சன் மண்டேலா அவர்கள், மனித உரிமை வழக்கறிஞர், மனச்சான்றின் கைதி, உலகளாவிய அமைதி ஆர்வலர் மற்றும், சுதந்திர தென்னாப்ரிக்காவில், சனநாயக வழியில், முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர். இவரே முதல் கறுப்பின அரசுத்தலைவருமாவார்.

இந்த உலகை, மேலும் சிறந்ததாக மாற்றுவதற்கு, ஒவ்வொருவருக்கும் ஆற்றலும், பொறுப்பும் உண்டு என்பதையும், அனைவரும் நல்மாற்றத்திற்கென செயல்படத் துவங்க வேண்டும் என்பதையும், இந்த உலக நாளில் நினைவுறுத்துகின்றது ஐ.நா. நிறுவனம்.

தென்னாப்ரிக்காவின் Mvezo என்ற கிராமத்தில், 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிறந்த நெல்சன் மண்டேலா அவர்கள், 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இவர், 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.