2017-07-17 14:50:00

பாசமுள்ள பார்வையில்.. அம்மா நன்றாக இருக்க வேண்டும்


சென்னையில் டாஸ்மாக் கடை ஒன்றில், வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன், அங்குச் சென்ற ஒருவரிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளான்.

எனது ஊர் நாமக்கல். இரண்டு வருடத்திற்கு முன்பு அப்பா இறந்து போனார். அம்மா சித்தாள் வேலைக்குப் போய்த்தான், என்னையும், தங்கையையும் பள்ளிக்கு அனுப்பினார்கள். நான் ஒன்பதாம் வகுப்பு முடித்ததும், விடுமுறையில்,  ஊரிலுள்ள துணிக்கடைக்கு வேலைக்குப் போனேன். மாதம் மூவாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவுக்கு உடுத்திக்கக்கூட நல்ல துணி கிடையாது. ஆனால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட்டதே இல்லை. கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும். உடனே எனக்கும், என் தங்கைக்கும் என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். தினமும் எங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத்தான் அம்மா வேலைக்குப் போவார்கள். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போவதற்குள், சுடச்சுடச் சோறு சமைத்துத் தருவார்கள். வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அது தெரியாத அளவுக்கு எங்கள் இரண்டு பேரையும் அம்மா வளர்த்தார்கள். எங்களை யாரும் விளையாட்டுக்குக்கூட திட்டவிட மாட்டார்கள். நமது குடும்பம் இப்போது இருக்கின்ற மாதிரி பின்னாளில் இருக்கக் கூடாது. நீ நன்றாகப் படித்து, உன் தங்கையையும் படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் நமது கஷ்டம் தீரும் என அடிக்கடி சொல்லுவார்கள். அம்மாவுக்காகத்தான் நான் நன்றாகப் படித்தேன். பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோது அம்மாவுக்குத் திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அப்போதிலிருந்து அம்மா வேலைக்குப் போகவில்லை. கடன் வாங்கியே எங்களுக்கு சோறு பொங்கிப் போடுவார்கள். அம்மா இப்படி இருக்கும்போது எனக்குத் தொடர்ந்து படிக்க பிடிக்கவில்லை. வேலைக்குப் போகிறேன் எனச் சொன்னதும், உன்னை விடுமுறையில் வேலைக்கு அனுப்பினது தவறாகிவிட்டது என அம்மா வருத்தப்பட்டார்கள். அக்கம்பக்கத்தார் சொன்னபின், கனத்த இதயத்தோடு எனக்கு உத்தரவு கொடுத்தார்கள். என் ஊர் ஆள் ஒருவரோடு சென்னைக்கு வந்து, ஓர் உணவகத்தில் வேலை செய்தேன். மாதம் ஐந்தாயிரம் கொடுத்தார்கள். பின், இந்த டாஸ்மாக் கடையில் ஆறாயிரம் சம்பளம் என, உணவக முதலாளி இங்கே என்னை அனுப்பினார். நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. வந்த புதிதில், இங்கு வருகிறவர்கள் எல்லாம் குடித்துவிட்டு, அருகில் வந்து பேசும்போது குமட்டும். சாப்பிடவே விருப்பமிருக்காது. வாந்தி எடுத்துவிடுவேன். இப்போது எல்லாமே பழகிவிட்டது. நான் இங்கு வேலை செய்கிறேன் என, இப்போதுவரை அம்மாவிடம் சொல்லவில்லை. சென்னையில், நகல் எடுக்கும் கடை ஒன்றில் வேலை பார்க்கிறேன் எனச் சொல்லி வைத்திருக்கிறேன். நான் இவ்வளவு கஷ்டத்தில் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னால், அம்மா அழுவார்கள். சோற்றைக்கூட தொடமாட்டார்கள். என் கஷ்டம் என்னோடு போகட்டும். அம்மா நல்லாயிருக்க வேண்டும். பாவம் அம்மா. எங்களுக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போயிருக்கிறார்கள்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.