2017-07-14 16:15:00

திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதுப் பயணம் பற்றிய நம்பிக்கை


ஜூலை,14,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தியத் திருத்தூதுப் பயணம், இவ்வாண்டு முடிவதற்குள் அல்லது, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இடம்பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோடர் மஸ்கரேனஸ் அவர்கள், இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார் என, Deccan Herald தினத்தாள், செய்தி வெளியிட்டுள்ளது.

2017ம் ஆண்டில், இந்தியா மற்றும், பங்களாதேஷ் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வேன் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, 2016ம் ஆண்டு அக்டோபரில், விமானப் பயணத்தில் செய்தியாளர்களிடம் அறிவித்ததைத் தொடர்ந்து, திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதுப் பயணம் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

மேலும், இந்தியாவில் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றால், 2017ம் ஆண்டின் முதல் பாதிப் பகுதியில், திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதுப் பயணத்திற்குரிய தேதிகளைக் குறிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும், ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில், இத்திருத்தூதுப் பயணம் பற்றிப் பேசியுள்ள ஆயர், மஸ்கரேனஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பதில் மத்திய அரசு ஆர்வமாக இருக்கின்றவேளை, திருத்தந்தையின் மதிப்பு முழுமையாகக் காக்கப்படும் வகையில், திருத்தூதுப் பயணம் அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதுப் பயணத்திற்கு, இவ்வாண்டில் சரியான நாள்கள் அமையாவிடில், 2018ம் ஆண்டின் ஆரம்பத்தில், இப்பயணம் இடம்பெறலாம் என்று தெரிவித்துள்ளார், ஆயர் மஸ்கரேனஸ்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1986ம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியாவில் மேற்கொண்ட பத்து நாள்கள் திருத்தூதுப் பயணத்தில், சென்னை உட்பட 14 நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார். 1999ம் ஆண்டு நவம்பரில், புது டெல்லிக்கு மட்டும் இத்திருத்தந்தை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Deccan Herald / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.