2017-07-13 15:21:00

நெருக்கடிகளைச் சந்தித்துவரும் வெனிசுவேலா மக்களோடு ஆயர்கள்


ஜூலை,13,2017. கடந்த சில மாதங்களாக கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வெனிசுவேலா மக்களோடு, செபத்தின் வழியே தன் அருகாமையை உணர்த்தியிருக்கும் திருத்தந்தையுடன் இணைந்து, ஆயர்களாகிய நாங்களும் விண்ணப்பம் ஒன்றை விடுக்கிறோம் என்று, அந்நாட்டு ஆயர்கள் அவசர மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜூலை 12, இப்புதனன்று, வெனிசுவேலா ஆயர்கள், கரகாஸ் நகரில் தங்கள் ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்த வேளையில், அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும், நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் என்ற தலைப்பில், அவசர விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டனர்.

தகுந்ததொரு குடியரசை வேண்டி மக்கள் மேற்கொண்ட போராட்டம், வன்முறைகளால் நிறைந்து, இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன என்பதை துயரத்துடன் வெளிப்படுத்தும் ஆயர்களின் மடல், தற்போதைய பிரச்சனைகளுக்கு குடியாட்சி வழியில் தீர்வுகள் காணப்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

ஜூலை 16 வருகிற ஞாயிறன்று, மக்களின் கருத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், அரசு, இந்த முயற்சியைக் குலைக்கும் வண்ணம் மேற்கொண்டுவரும் போலி வாக்கெடுப்பு முயற்சிகளை, ஆயர்கள் தங்கள் மடலில் கண்டனம் செய்துள்ளனர்.

வெனிசுவேலா நாடு அமைதியான வழியில் தன் அரசியல் பாதையை வகுத்துக்கொள்ள, ஜூலை 21ம் தேதி, மக்கள் அனைவரும் ஒரு நாள் நோன்பைக் கடைப்பிடித்து செபத்தில் ஈடுபடுமாறு, ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.