2017-07-13 15:27:00

கடத்தப்பட்ட அ.பணி. உழுன்னலில் உயிருடன் இருக்கிறார்


ஜூலை,13,2017. 2016ம் ஆண்டு, மார்ச் மாதம் ஏமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், இன்னும் உயிருடன் இருக்கிறார் என்றும், அவரை விடுவிக்க ஏமன் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும், அந்நாட்டு துணைப்பிரதமர் கூறியுள்ளார்.

ஜூலை 10, கடந்த திங்கள் முதல், இந்தியாவில் நான்குநாள் பயணம் மேற்கொண்ட ஏமன் துணைப்பிரதமர் Abdulmalik Abduljalil Al-Mekhlafi அவர்கள், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களிடம் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

இச்சந்திப்பையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுவராஜ் அவர்கள், இந்தியாவும் ஏமன் அரசுடன் இணைந்து, அருள்பணி உழுன்னலில் அவர்களின் விடுதலைக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடென் நகரில், அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் நடத்தி வந்த முதியோர் இல்லத்தில் நுழைந்த தீவிரவாதிகள், 4 அருள்சகோதரிகள் உட்பட 16 பேரை கொலை செய்துவிட்டு, அவ்வில்லத்தில் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றிய அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களை பிணைக்கைதியாகக் கடத்திச் சென்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.