2017-07-13 15:14:00

உலகில் 30 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை


ஜூலை,13,2017. உலகில் வாழும் பத்துபேருக்கு மூன்று பேர், தகுந்த, பாதுகாப்பான குடிநீர் வசதிகள் இல்லாமல் வாழ்கின்றனர் என்றும், பத்துபேருக்கு ஆறுபேர், கழிவறை வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்றும், ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

உலக நலவாழ்வு நிறுவனமான WHOவும், குழந்தைகள் நலநிதி அமைப்பான UNICEFம் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், பாதுகாப்பான குடிநீர் வசதிகள் அற்றச் சூழலில் வளரும் குழந்தைகள், வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கு உள்ளாகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பான நீர் மற்றும், கழிவறை வசதிகளை, தங்கள் இல்லங்களில் கொண்டிருப்பது, செல்வம் மிகுந்த ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உரிமைகளாக இருப்பது அநீதியான ஒரு நிலை என்று WHO தலைமை இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் கடமை, நீர், கழிவறை வசதிகள் என்ற மிகத் தேவையானவற்றிலிருந்து துவங்கவேண்டும் என்று, UNICEF இயக்குனர் Anthony Lake அவர்கள் கூறினார்.

உலகில் இன்று 210 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 26 கோடியே 30 இலட்சம் மக்கள், தங்கள் நீரைக் கொணர்வதற்கு ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றும், ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.