2017-07-12 15:32:00

பாசமுள்ள பார்வையில்... – பகல் முழுவதும் நம்முடனேயே


இருவருக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை பாக்கியம்தான் இன்னுமில்லை. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்துவிட்டனர். அவர்கள் சுற்றாத கோவில்களும் இல்லை. ‘இருவரிடமும் குறையில்லை, சீக்கிரமே வாரிசு ஒன்று பிறக்கும்’ என்ற நம்பிக்கையைத்தான் ஒவ்வொருவரும் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தனக்கு குழந்தை பிறக்காதா, என்ற ஏக்கத்திலேயே இருந்த அந்தப் பெண், ஒரு காரியம் செய்தார். பக்கத்து வீடுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை, தான் வீட்டிலிருந்து பார்ப்பதாக முன்வந்தார், அதுவும், இலவசமாகவே பார்ப்பதாக அறிவித்தார். பக்கத்து வீட்டு தம்பதிகளுக்கு ஒரே ஆனந்தம். இலவசமாகவே பிள்ளைகளை கவனித்துக் கொள்ள ஒரு நல்ல ஆயா கிடைத்துவிட்டாரே என மகிழ்ந்தனர். குழந்தையில்லாத அத்தம்பதியின் வீட்டில் இப்போது 14 குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு மழலைப் பள்ளியின் சூழல் அங்கு உருவாக்கப்பட்டிருந்தது.  இப்போதெல்லாம் அந்த பெண்ணின் கணவர், மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பிவிடுகிறார், குழந்தைகளோடு சிறிது நேரம் விளயாடுவதற்காக. வேலையிலிருந்து திரும்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும்போதுதான் இந்த தம்பதியருக்கு, மனதுக்கு சிறிது வருத்தமாக இருக்கும், குழந்தைகளைப் பிரிய வேண்டுமே என்று. ஆனால், சில குழந்தைகளும் இவர்களைப் பிரிய மனமின்றி செல்வதைப் பார்க்கும்போது, அதுவே ஆனந்த சுகமாகிவிடும். இருவரும் நினைத்துக் கொள்வார்கள், 'இதுவரை நம்முடன் இருந்த நம் குழந்தைகள், இரவில் வேறு வேறு வீடுகளில் தூங்க மட்டும் சென்றிருக்கின்றன’ என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.