2017-07-12 16:06:00

அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய, இராணுவம் உதவாது


ஜூலை,12,2017. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் அமைதியையும், பாதுகாப்பையும் உருவாக்க, இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைப்பது அவசியம் என்று, ஐரோப்பிய திருஅவைகளின் அவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவச் செலவுகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள இத்தருணத்தில், போர்க் கருவிகளைப் பெருக்குவதால், அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியாது என்று, ஐரோப்பிய திருஅவைகளின் அவை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனைகளான, வேலைவாய்ப்பற்ற இளையோர், கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நலிவானப் பொருளாதார நிலை ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் தன் கவனத்தைச் செலுத்தினால், அமைதியும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று ஐரோப்பிய திருஅவைகளின் அவை பரிந்துரைத்துள்ளது.

இராணுவத்தையும், போர்க்கருவிகளையும் பெருக்குவதே, அமைதியை உருவாக்கும் சிறந்த வழி என்று வல்லரசுகள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஒரு மாற்றாக, ஐரோப்பிய ஒன்றியம், ஆக்கப்பூர்வமான வழிகளைச் சிந்திக்கவேண்டும் என்று, ஐரோப்பிய திருஅவைகளின் அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.