2017-07-12 15:40:00

2016ம் ஆண்டு, ஐ.நா.அவை மீள் குடியமர்த்திய 1,00,000 மக்கள்


ஜூலை,12,2017. உலகெங்கிலும், புலம்பெயர்ந்தோரில், ஏறத்தாழ ஒரு இலட்சம் மக்கள், 2016ம் ஆண்டு, அவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்வண்ணம், ஐ.நா. அவையின் குடிபெயர்ந்தோர் அமைப்பு உதவி செய்துள்ளதென, ஐ.நா.அவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

IOM எனப்படும் பன்னாட்டு குடிபெயர்வு நிறுவனமும், மக்களை மீள் குடியமர்த்தும் AVRR எனப்படும் அமைப்பும் ஒருங்கிணைந்து, 2016ம் ஆண்டு மேற்கொண்ட முயற்சிகளின் விவரங்கள் அடங்கிய அறிக்கையொன்று, இச்செவ்வாயன்று வெளியானது.

இவ்வறிக்கையின்படி, 161 நாடுகளிலிருந்து வெளியேறி, 110 வேற்று நாடுகளில் குடியேறிய மக்கள், மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள் என்றும், நான்கில் ஒரு பகுதியினர் குழந்தைகள் என்றும் கூறும் இவ்வறிக்கை, இதுவரை திரும்பிச் சென்றுள்ள மக்களில் 1,253 பேர், பெரியவர்கள் துணையின்றி வெளியேறிச் சென்ற குழந்தைகள் என்று கூறியுள்ளது.

ஜெர்மன் நாட்டில் குடியேறிய 54,000த்திற்கும் அதிகமானோர் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்றும், அதற்கு அடுத்தபடியாக, கிரேக்க நாட்டிலிருந்து 6,153 பேரும், ஆஸ்திரியாவிலிருந்து 4,812 பேரும், தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டிற்குத் திரும்பியவர்களில், ஆல்பேனியா நாட்டினர் அதிகம் என்பதும், அதற்கடுத்தபடியாக ஈராக், ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்ரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு மீள்  குடியமர்த்தப்பட்ட மக்களைவிட, 41 விழுக்காடு கூடுதலாக, 2016ம் ஆண்டில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று, இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.