ஜூலை,08,2017. கப்பலில் வேலை செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக்காட்டவும், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிக்கவுமென, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 2ம் ஞாயிறன்று, கடல் ஞாயிறு சிறப்பிக்கப்படுகின்றது.
ஜூலை 9, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இந்நாளை முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, கடலில் வேலை செய்வோர்க்கு மறைப்பணியாற்றும் பிரித்தானிய அமைப்பின் இயக்குனர் ஜான் கிரீன் அவர்கள், கப்பலில் வேலை செய்வோர் மற்றும், ஏனைய கடல் தொழிலாளர்கள் பெரும்பாலும் மறக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
உலகில் இடம்பெறும் வர்த்தகத்தில் 95 விழுக்காடு கடல் வழியாக நடைபெறுகின்றது என்றும், சரக்குகளை அந்தந்த இடங்களில் சேர்ப்பதற்கு, இத்தொழிலாளர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும் கூறினார், ஜான் கிரீன்.
கடலில் வேலை செய்வது மிகவும் ஆபத்தானது என்றும், கடந்த ஆண்டில், ஏறத்தாழ நூறு கப்பல்கள், நூற்றுக்கு மேற்பட்ட டன் பொருள்களுடன் கடலில் மூழ்கியுள்ளன என்றும், ஏறக்குறைய ஆயிரம் பணியாளர்கள் இறந்துள்ளனர் என்றும், ஜான் கிரீன் அவர்கள், புள்ளி விபரங்களை அறிவித்தார்.
இத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனையில், கடல்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் ஒன்று எனவும், மேற்கு ஆப்ரிக்கா மற்றும், தெற்கு ஆசியாவில் கடல்கொள்ளையர்கள் இன்னும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கடல் பணியாளர்களுக்கு மறைப்பணியாற்றும் அமைப்பு, உலகில் 300 துறைமுகங்களில் செயல்படுகின்றது. மேலும், 160க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, கடல் ஞாயிறு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |