2017-07-08 16:14:00

இலங்கைச் சிறாரில் 36% ஊட்டச்சத்துப் பற்றாக்குறை


ஜூலை,08,2017. இலங்கையிலுள்ள சிறாரில் 36 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன அவர்கள், தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள மொத்த சிறாரில் 5 இலட்சத்து 64 ஆயிரத்து 288 பேர் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, நாடாளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர் சேனரத்ன அவர்கள், இந்த எண்ணிக்கை, மொத்த சிறாரில் 36.1 விழுக்காடு என்றும் சுட்டிக்காட்டினார்.

சிறாரின் ஊட்டச்சத்து தொடர்பாக 2016ம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஊட்டச்சத்து குறைந்த சிறார் என இனம் காணப்பட்டவர்களில் 2.43 இலட்சம் பேர், வயதுக்கேற்ப எடை இல்லாதவர்கள் என்றும் அவர் கூறினார்.

1.44 இலட்சம் பேர் வயதுக்கேற்ப உடல் பருமனையும், 1.77 இலட்சம் பேர் உயரத்திற்கேற்ப உடல் பருமனையும் கொண்டிராதவர்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்கள், குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடி, உலக உணவுத் திட்ட உணவு பொருள்கள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால், சரியானபடி மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு, பரவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.