2017-07-07 15:53:00

ஹாம்பர்க் ஜி20 உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி


ஜூலை,07,2017.  உலகில் எவரையும் ஒதுக்கி விடாமல், அனைத்து மக்களையும் உள்ளடக்கி இடம்பெறும், வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வடிவமைப்பதற்கு, பன்னாட்டு சமுதாயம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டுமென்று, தன் நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் (Hamburg) நகரில், ஜூலை 07, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள ஜி20 (G20) நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்பு உணர்வு, நீதி மற்றும், அமைதி நிறைந்த சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவும், நான்கு செயல்திட்டங்களைப் பரிந்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆயுத மோதல்களால் ஏற்படும் ஏழ்மை மற்றும், குடிபெயர்தல் பற்றி, கவலையுடன் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தென் சூடான், ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி நாடுகள், சாட் ஏரிப் பகுதி, ஏமன் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ முப்பது இலட்சம் மக்கள் உணவு மற்றும், தண்ணீரின்றி துன்புறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் இடம்பெற்றுவரும் பயனற்ற கொலைகள் பற்றியும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, தற்போது உலகில் நிலவும் ஆயுதப் போட்டியையும், போர்களையும், போர்களில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதையும் தவிர்த்தால், 2030ம் ஆண்டுக்குள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடைய முடியும் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டில், இலண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் விடுத்திருந்த எச்சரிக்கையையும் கோடிட்டுக் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாட்டில் கலந்துகொள்வோர் குறைவான நாடுகளின் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், உலகளாவிய உற்பத்தியில் 90 விழுக்காட்டை, அந்நாடுகள் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, ஜூலை 08, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும். இம்மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் ஜெர்மன் நாட்டு சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் (Angela Merkel) அவர்களுக்கு, இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1999ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஜி20 அமைப்பில், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, பிரான்ஸ், சீனா, கானடா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும், ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.