2017-07-07 15:35:00

வத்திக்கான் தொழிற்கூடத்தில் திருத்தந்தை திருப்பலி


ஜூலை,07,2017. இயேசு நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தார் என்றும், நாம் எல்லாரும் பாவிகளாய் இருப்பதால், இயேசுவை நம்மிடம் ஈர்ப்பதற்கு வாய்ப்பாக உள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் மறையுரை வழங்கினார்.

வத்திக்கானிலுள்ள தொழிற்கூடத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட பீடத்தில், ஏறத்தாழ நூறு தொழிலாளர்களுக்கு, இவ்வெள்ளி காலை 7.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தேயுவின் அழைப்பு பற்றிக் கூறும், இந்நாளைய நற்செய்தியை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

உரோமையர்களுக்கு வரிவசூலித்துக்கொடுத்த மத்தேயு, பாவி என ஒதுக்கி வைக்கப்பட்டார், ஆனால் இயேசு அவரை அழைத்தார் என்றுரைத்த திருத்தந்தை, புனித ஜெரோம் அவர்களின் வாழ்வு பற்றியும் பகிர்ந்துகொண்டார். இப்புனிதர் எல்லாவற்றையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தபின், இன்னும் என்ன வேண்டுமெனக் கேட்டபோது, உன் பாவங்களைக் கொடு என, ஆண்டவர் அவரிடம் கேட்டார் எனவும் திருத்தந்தை கூறினார்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையாகிய இன்று, இயேசுவின் திருஇதயத்தை நினைக்கின்றோம், இரக்கமுள்ள இந்த இதயம், நம் பலவீனங்களையும், பாவங்களையும், நம்மிடமிருந்து கேட்கிறார், அவை அனைத்தையும் மன்னிக்கிறார், இயேசு எல்லாவற்றையும் எப்போதும் மன்னிக்கிறார் என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் இறுதியில், தொழிலாளர்கள் மரச் சிலுவை ஒன்றை, திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினர். பின் அந்தத் தொழிற்கூடத்தில், அனைவரோடும் சேர்ந்து காலையுணவையும் அருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.