2017-07-06 16:02:00

"திருத்தந்தையிடம் சொல்லுங்கள்!" – இளையோர் வலைத்தளம்


ஜூலை,06,2017. 2018ம் ஆண்டு, இளையோரை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிக்கும் வண்ணம், சுவிட்சர்லாந்து ஆயர்கள், வலைத்தள கருத்துக்கணிப்பு ஒன்றை, ஜூலை 6, இவ்வியாழனன்று துவக்கியுள்ளனர்.

"திருத்தந்தையிடம் சொல்லுங்கள்!" ("Tell the Pope!") என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைத்தள முயற்சியில் பங்கேற்க, 16 வயது முதல் 29 வயது முடிய உள்ள அனைத்து இளையோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், திருத்தந்தையிடம் கேட்க விழையும் கேள்விகள், மற்றும் அவருக்குக் கூறவிழையும் பரிந்துரைகள் ஆகியவற்றை, இவ்வாண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு, சுவிட்சர்லாந்து ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், 20 கேள்விகள் அடங்கிய கருத்துக்கணிப்பு ஒன்றும் இவ்வலைத்தளத்தில் உள்ளது என்றும், இங்கு பதியப்படும் கருத்துக்கள் திரட்டப்பட்டு வத்திக்கானுக்கு அனுப்பப்படும் என்றும் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், 2018ம் ஆண்டின் துவக்கத்தில், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் இளையோருக்கென, Fribourg எனும் நகரில், மாநாடு ஒன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில், 15வது உலக ஆயர்கள் மாமன்றம், "இளையோர், நம்பிக்கை, அழைப்பைத் தேர்ந்து தெளிதல்" என்ற மையக்கருத்துடன் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.