2017-07-05 16:26:00

பாசமுள்ள பார்வையில்.. கண்ணீர் சிந்திய அகிதா அன்னை


1973ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியன்று, ஜப்பானின் அகிதா (Akita) நகரில், திருநற்கருணையின் ஊழியர் அருள்சகோதரிகள் இல்லத்தில், செவித்திறனற்ற அருள்சகோதரி ஆக்னஸ் (Agnes Katsuko Sasagawa) அவர்கள் செபித்துக்கொண்டிருந்தபோது, திருநற்கருணை வைக்கப்பட்டிருந்த பீடத்திலிருந்து, சுடர்விடும் ஒளியையும், அதைச் சுற்றி பெருமளவான வானதூதர்களையும் கண்டார். பின், அதே மாதத்தின் இறுதியில், ஒரு வானதூதர் தோன்றி, அச்சகோதரியோடு பேசி, செபிக்கத் தொடங்கினார். ஓ இயேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பினின்று ஆன்மாக்களைக் காப்பாற்றும், அனைத்து ஆன்மாக்களையும், குறிப்பாக, உமது இரக்கம் அதிகம் தேவைப்படுகின்றவர்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் (போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் மூன்று சிறாருக்கு அன்னை மரியா கற்றுக்கொடுத்த செபம்) என, அடிக்கடி செபிக்குமாறு கூறிச் சென்றார் தூதர். பின் சகோதரி ஆக்னசுக்கு, இடது உள்ளங்கையில், சிலுவை வடிவில் காயங்கள் தோன்றி இரத்தம் வடியத் தொடங்கியது. சிலநேரங்களில் அவை மிகுந்த வேதனையைக் கொடுத்தன. ஜூலை 6ம் தேதி வானதூதர் மீண்டும் சகோதரிக்குத் தோன்றி, செபிப்பதற்கு ஆலயம் செல்லுமாறு கூறி, அவரும் உடன் சென்றார். ஆலயம் சென்றவுடன் தூதர் மறைந்துவிட்டார். அச்சகோதரி செபித்துக்கொண்டிருக்கையில், ஆலயத்திலிருந்த அன்னை மரியா திருவுருவம் பேசத் தொடங்கியது. முந்தைய நோயினால் பல ஆண்டுகளாக முழுவதும் செவித்திறனையிழந்திருந்த அச்சகோதரி, அன்னை மரியா பேசுவதைக் கேட்டார். அன்று அவரும் குணமடைந்தார். அன்னை மரியா, அச்சகோதரியோடு சேர்ந்து செபிக்கவும் தொடங்கினார். வானதூதரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். அடுத்த நாளிலிருந்து அன்னை மரியா திருவுருவக் கரத்திலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. சில நேரங்களில், இவ்விருவரின் கரங்களிலிருந்து ஒரே நேரத்தில் இரத்தம் வடிந்தது. சகோதரி ஆக்னசின் காயம், அதே ஆண்டு ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை நீடித்தது. அன்னை மரியா திருவுருவக் கரத்திலிருந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இரத்தம் வடிந்தது. மேலும், அன்னை மரியா உருவத்திலிருந்து முத்து முத்தாக வியர்வையும் வடிந்தது. இது, இனிய ரோஜா மலரின் நறுமணமாக வீசியது. 1973ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி அன்னை மரியா, சகோதரி ஆக்னசுக்குக் காட்சியளித்தபோது, மக்கள் மனந்திரும்பி, வாழ்வைச் சீரமைக்காவிட்டால், மனித சமுதாயத்தின் மீது பயங்கரமான தண்டனை அனுப்பப்படும் என எச்சரித்தார். 1975ம் ஆண்டு சனவரி 4ம் தேதி அன்னை மரியா திருவுருவம் அழத் தொடங்கியது. முதல் நாளில் மூன்று முறை அழுதது. இதை, 1979ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, ஜப்பான் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 1981ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வியாகுல அன்னை விழாவன்று, இத்திருவுருவம் கடைசி முறையாக, 101 முறைகள் அழுதது. இந்தக் கண்ணீரை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இது மனிதக் கண்ணீர், ஆனால் புதுமை என அறிவித்தனர். அன்னை மரியா கரத்திலிருந்து வடிந்த இரத்தம், B குரூப்பையும், வியர்வையும், கண்ணீரும் AB குரூப்பையும் சேர்ந்தவை என அறிவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அகிதா நகர் அன்னை மரியாவிடம் செபிக்கும் பலர், பல்வேறு விதமான உடல் மற்றும், உள்ள நோய்களிலிருந்து குணமடைவதாகச் சாட்சி பகர்ந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.