2017-07-04 15:13:00

G20 உச்சி மாநாட்டிற்கு ஜெர்மன் ஆயர்கள்


ஜூலை,04,2017. வருகிற வெள்ளி, சனி (ஜூலை,7,8) தினங்களில், ஜெர்மனியின் Hamburg நகரில் நடைபெறவிருக்கும் G20 உச்சி மாநாட்டில், எல்லாப் படைப்புயிர்களும் பாதுகாக்கப்படுவதற்கு ஆவன செய்யப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளனர், ஜெர்மன் ஆயர்கள்.

ஜெர்மன் ஆயர் பேரவையின் சமூகக் கோட்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரான Essen ஆயர், Franz-Josef Overbeck அவர்கள் ஆயர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள், உலகின் அனைத்து மக்களுக்கும், நீதி மற்றும் அமைதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் இந்நாள்களில், மேற்கத்திய நாடுகளின் பொதுவான நிலையையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்று கவலை தெரிவித்துள்ள ஆயர், Overbeck அவர்கள், இந்த உச்சி மாநாடு, ஓர் இக்கட்டான சூழலில் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில், சர்வாதிகாரப் போக்கு கொண்ட அரசுகள் மலர்ந்து வருவது, தற்போதைய உலகின் சூழலுக்கு ஏற்றதாக இல்லையென்றும் கூறியுள்ள ஆயர், உலகில் அமைதி, பாதுகாப்பு, நியாயமான வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில், அமெரிக்க ஐக்கிய நாடு முக்கிய பங்காற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

G20 அமைப்பில், இந்தியா, இந்தோனேசியா, சீனா, பிரேசில், துருக்கி, தென்னாப்ரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட 19 நாடுகள் மற்றும், ஐரோப்பிய ஒன்றியம் உறுப்புக்களாக உள்ளன.

ஆதாரம் : SIR /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.