2017-07-03 16:02:00

ஈராக்கின் குர்திஸ்தானில் புதிய கத்தோலிக்க கோவில்


ஜூலை.03,2017. ஈராக்கின் குர்திஸ்தானின் எர்பில் புறநகர்ப்பகுதியில் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களால், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெயரிலான கோவில் ஒன்று அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாடு பல்வேறு துன்பநிலைகளை எதிர்கொண்டு வந்தாலும், அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சோதனைகளைக் கைவிட்டு, அந்நாட்டின் கல்தேய பாரம்பரியம் காக்கப்பட ஒவ்வொரு கிறிஸ்தவரும் உதவவேண்டும் என இக்கோவில் அர்ச்சிப்புத் திருப்பலியில் மறையுரையாற்றினார் முதுபெரும் தந்தை சாக்கோ. இந்த புதிய கோவில் அர்ச்சிப்பு விழாவில், ஈராக் மற்றும் ஜோர்டனுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Alberto Ortega Martin அவர்களுடன், பல்வேறு கிறிஸ்தவ வழிபாட்டுமுறைகளைச் சேர்ந்த பேராயர்களும், ஆயர்களும், கலந்து கொண்டனர்.

குர்திஸ்தான் அரசின் கிறிஸ்தவ அலுவலகம் வழங்கிய உதவிகளுக்கும் இத்திருப்பலியின் இறுதியில் நன்றியை தெரிவித்தனர், கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.