2017-07-01 15:43:00

திருத்தந்தையின் உதவி கேட்டு பாகிஸ்தானிய அகதி


ஜூலை,01,2017. கிரேக்க நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற, பாகிஸ்தானிய கத்தோலிக்கர் ஒருவர், தன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலை எதிர்நோக்கிவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உதவி கேட்டு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என ஆசியச் செய்தி கூறுகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு ஏப்ரலில், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவு சென்று, புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தவேளையில், பாகிஸ்தானிய கத்தோலிக்கர் Kamran Iqbal Maseh அவர்களும், திருத்தந்தையைச் சந்தித்துள்ளார்.

பாகிஸ்தானில், தனது சமய நம்பிக்கைக்காகப் பாகுபடுத்தப்பட்டு, சித்ரவதைகளை எதிர்நோக்கியதால், அந்நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக, அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், Iqbal Maseh.

கிறிஸ்தவர் என்பதால், பாகிஸ்தானில் அடிமைபோல் நடத்தப்பட்டு, கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், Iqbal Maseh அவர்கள், தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Iqbal Maseh அவர்கள், கிரேக்க நாட்டிலிருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்படவுள்ளார் என, ஆசியச் செய்தி கூறுகின்றது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.