2017-07-01 15:19:00

கடவுள் நம் எல்லாரிடமும் ஒப்படைத்துள்ள அன்பின் கடமை


ஜூலை,01,2017. “மனித வாழ்வை, எல்லாவற்றுக்கும் மேலாக, அவ்வாழ்வு நோயால் காயப்படுத்தப்பட்டுள்ளபோது, அதைப் பாதுகாக்க வேண்டியது, கடவுள் நம் எல்லாரிடமும் ஒப்படைத்துள்ள அன்பின் கடமை” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் இலண்டன் Great Ormond Street சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, அபூர்வ நோயால் துன்புறும், Charlie Gard என்ற பத்து மாத ஆண் குழந்தையின் வாழ்வை நீடிக்கும் கருவிகளை அகற்றி விடுவதற்கு, நீதிமன்றம் தீர்மானித்துள்ளவேளை, மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தனது டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்குழந்தையின் பெற்றோரான Chris Gard, Connie Yates ஆகிய இருவரும், தங்களின் மகனுக்குச் சிகிச்சையளிக்க அமெரிக்க ஐக்கிய நாடு செல்ல விரும்பியும், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஜூன் 30, இவ்வெள்ளியன்று, உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்படவிருந்த நிலையில், பெற்றோர் தங்கள் மகனுடன், சற்று அதிக நேரம் செலவழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பிறப்பிலேயே அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை Charlie, தன் தோள்களையும், கால்களையும் அசைக்க முடியாமலும், தானாக மூச்சு விடவோ அல்லது உணவு உண்ணவோ முடியாமலும் உள்ளான் எனச் சொல்லப்படுகின்றது

மேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருத்தந்தை நிறைவேற்றும் காலைத் திருப்பலிகள், இந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இடம் பெறாது என்றும், இது, செப்டம்பர் பாதியிலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரைகள், ஜூலை மாதத்தில் இடம்பெறாது என்றும், அவை ஆகஸ்டில் மீண்டும் தொடங்கும் என்றும், ஞாயிறு மூவேளை செப உரைகள் வழக்கம்போல் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.