2017-07-01 15:51:00

இந்தியாவில் சமய சகிப்பற்றதன்மைக்கு எதிராக அமைதிப் போராட்டம்


ஜூலை,01,2017. இந்தியாவில் பரவலாக இடம்பெற்றுவரும் சமய சகிப்பற்றதன்மைக்கு எதிர்ப்பையும், வன்முறைக்குப் பலியானவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள், புது டில்லியில் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

‘எனது பெயரால் அல்ல’ என்ற தலைப்பில், ஜூன் 28, இப்புதனன்று, இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த திருஅவை குழுக்கள் உட்பட, பல்வேறு குழுக்களால், இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.  

இந்தியாவிலுள்ள ஒரு சிறு குழுவினர் கட்டளையிடும், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தையும், வாழ்வுமுறையையும், அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டுமென, வலியுறுத்துவதை ஏற்க முடியாது என, ஒன்றிணைந்த கிறிஸ்தவக் கழகத் தலைவர், மிக்கேல் வில்லியம்ஸ் அவர்கள், UCA செய்தியிடம் கூறினார்.

விளம்பர அட்டைகள், தேசியக் கொடிகள் போன்றவற்றை ஏந்தியவண்ணம், மாணவர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள் என, ஆயிரக்கணக்கானோர், இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, இவ்வியாழனன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில், வாகனம் ஒன்றில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், வாகன ஓட்டுனரை முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று, அடித்துக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.