2017-06-30 14:25:00

அரசியல் அளவிலான உரையாடல் இன்றியமையாதது


ஜூன்,30,2017. மற்றவர் கூறும் பரிந்துரைகளை வரவேற்று, அவர்களின் ஏக்கங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைக்கும் எண்ணத்தோடு இடம்பெறும், அரசியல் அளவிலான உரையாடல் இன்றியமையாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, கூறினார்.

இத்தாலிய - இலத்தீன் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, அதன் 200 பிரதிநிதிகளை, இவ்வெள்ளி நண்பகலில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திறமைகளைக் கண்டுணர்தல், ஒன்றிணைந்த முயற்சிகள், உரையாடலை ஊக்குவித்தல் ஆகிய மூன்று தலைப்புகளில், தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகள், வரலாற்றிலும், கலாச்சாரத்திலும், இயற்கை வளங்களிலும் வளமையானவை என்றும், இந்நாடுகளின் மக்களும், நல்லவர்கள் மற்றும், பிறருக்கு உதவுவதிலும் சிறந்தவர்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, இக்கண்டத்தில் இவ்வளவு நல்லவைகள் இருந்தாலும், இங்கு நிலவும் பொருளாதார மற்றும், அரசியல் நெருக்கடிகள், ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, சமூக சமத்துவமின்மை, நம் பொதுவான இல்லத்தைச் சுரண்டல், உரிமை மீறல்கள் போன்றவற்றையும் அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்தார்.

முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு, அண்மை ஆண்டுகளில் அதிகரித்துள்ள  புலம்பெயர்ந்தவர் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு, இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இலத்தீன் அமெரிக்கா ஆற்றவேண்டிய பல நடவடிக்கைகளில் உரையாடல் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் எனத் தான் நம்புவதாகவும் உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒழுங்குமுறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் வழியாக, நீதியான சமுதாயத்தை அமைப்பதற்கு, பல நாடுகள், கடுமையாக உழைத்து வருவதையும் குறிப்பிட்டார்.

செவித்திறன் அற்றவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல் போலன்றி, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொண்டு, நீதி மற்றும், அமைதியான வழிகளில், உடன்பிறப்பு உணர்வையும், நட்பையும் வலுப்படுத்த, எதிரில் அமர்ந்திருப்பவரும் ஆவல் கொண்டுள்ளார் என்ற உணர்வில், உரையாடல் இடம்பெற வேண்டும் என்பதை, வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.