2017-06-29 15:15:00

முன்னாள் திருத்தந்தையைச் சந்தித்த புதிய கர்தினால்கள்


ஜூன்,29,2017. ஜூன் 28, இப்புதன் மாலை கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஐந்து பேர், சுவீடன், எல் சால்வதோர், லாவோஸ், இஸ்பெயின், மாலி ஆகிய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்களும், பேராயர்களுமாவர்.

சுவீடன் நாட்டின் Stockholm ஆயரான, 68 வயது நிறைந்த Anders Arborelius அவர்கள், எல் சால்வதோர் நாட்டின் சான் சால்வதோர் உயர் மறைமாவட்ட துணை ஆயரான 75 வயது நிறைந்த Gregorio Rosa Chávez அவர்கள், லாவோஸ் நாட்டின் Paksé மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான 73 வயது நிறைந்த Louis-Marie Ling Mangkhanekhoun அவர்கள், இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா பேராயரான 71 வயது நிறைந்த Juan José Omella அவர்கள், மாலி நாட்டின் பாமாக்கோ உயர் மறைமாவட்டத்தின் பேராயரான 74 வயது நிறைந்த Jean Zerbo அவர்கள், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐந்து கர்தினால்களாவர்.

கடந்த மாதம், மே 21, ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் திருத்தந்தை அறிவித்த இந்த ஐந்து பேரில், சுவீடன், மாலி, லாவோஸ், எல் சால்வதோர் நாடுகளில் முதல் முறையாக கர்தினால்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 28 புதனன்று மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிதாகப் பொறுப்பேற்ற கர்தினால்கள் ஐந்து பேருடன், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இல்லம் சென்று, புதிய கர்தினால்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐந்து கர்தினால்களையும் இணைத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 225 என்பதும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 121 என்பதும் குறிப்பிடத்தக்கன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.