2017-06-29 15:21:00

"நான் உரோம் நகரில் உனக்குச் சாதகமாக இருப்பேன்"


ஜூன்,29,2017. "நான் உரோம் நகரில் உனக்குச் சாதகமாக இருப்பேன்" என்று, புனித இஞ்ஞாசியாருக்கு இறைவன் வழங்கிய காட்சி, இன்று கர்தினால்களாக பொறுப்பேற்க வந்திருக்கும் எங்களுக்கு தகுந்த ஒரு செய்தியாக அமைந்துள்ளது என்று, புதிய கர்தினால்களில் ஒருவர், திருத்தந்தையிடம் கூறினார்.

ஜூன் 28, இப்புதனன்று மாலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஐந்து புதிய கர்தினால்களுக்குப் பொறுப்புக்கள் வழங்கப்படும் வழிபாட்டு நிகழ்வை தலைமையேற்று நடத்த வந்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பார்சலோனா பேராயரான Juan José Omella அவர்கள் வாழ்த்துரை வழங்கிய வேளையில், இவ்வாறு கூறினார்.

இயேசு சபையைச் சேர்ந்த புனித இஞ்ஞாசியார், புனித பீட்டர் ஃபேபர், மற்றும் அருள்பணி தியேகோ லயினஸ் ஆகியோர், திருத்தந்தை 3ம் பவுல் அவர்களை சந்திக்க வரும் வழியில் லாஸ்தோர்த்தா எனுமிடத்தில், இறைவன், புனித இஞ்ஞாசியாருக்கு வழங்கிய காட்சியை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட பேராயர் Omella அவர்கள், உரோம் நகரில் தங்களுக்கு காத்திருப்பது சிலுவை மரணமா என்பதை அறியாமல் புனித இஞ்ஞாசியார் அந்நகருக்குள் அடியெடுத்து வைத்ததைப்போல, தாங்களும் வந்திருப்பதாக எடுத்துரைத்தார்.

கர்தினால்களுக்கு வழங்கப்படும் சிவப்பு உடையும், தொப்பியும், பெருமையை பறைசாற்றும் வண்ணம் அல்ல என்றும், மாறாக, குருதி சிந்திய மீட்பரைக் குறிக்கும் வண்ணம் என்றும் பேராயர் Omella அவர்கள் தன் வாழ்த்துறையில் குறிப்பிட்டார்.

திருப்பயணியாக விளங்கும் திருஅவையுடன் நாங்களும் தெருக்களில் இறங்கி, மக்களோடு நடைபயில இந்த பொறுப்பு எங்களுக்கு உதவும் என்றும், அன்னை மரியா, புனிதர்களான பேதுரு, பவுல் ஆகியோர் தங்களுக்குப் பரிந்துபேசுவதை தாங்கள் உணர்வதாகவும் பேராயர் Omella அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.