2017-06-28 16:33:00

பாசமுள்ளப் பார்வையில் : ஒலியையும் நிறுத்தி வைக்கும் பாசம்


60 ஆண்டுகளுக்கு முன், ஒரு குக்கிராமத்தில் நடந்த சம்பவம் இது. எட்டு வயதான அந்த சிறுவனுக்கு தாய்தான் எல்லாம். தந்தை அடுத்த மாநிலத்தில் கட்டட வேலைக்குச் சென்று, அவ்வப்போது வருவதுண்டு. 6 மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும், ஓரிரு நாட்களில் புறப்பட்டு விடுவார். அந்த வீட்டில் பொழுதுபோக்கிற்கென இருந்தது, ஒரு பழைய காலத்து வானொலிப் பெட்டிதான். அந்த வானொலியில் ஒலிபரப்பாகும் ஒரு குறிப்பிட்டப் பாட்டை மட்டும்தான் அவனின் அம்மா விரும்பி கேட்பார்கள். அந்த பாட்டைக் கேட்கும்போதெல்லாம், அச்சிறுவனின் அம்மாவின் அம்மா, அதாவது, இவன் பாட்டி அவன் தாய்க்கு ஞாபகத்தில் வருவார்களாம். கடந்த வாரம்தான் அப்பாவும் வந்துவிட்டுச் சென்றிருந்தார். அவருக்கும் சரியான வேலை இல்லையாம். அம்மா கையிலும் காசில்லை. தினசரி வயல் வேலையில் கிட்டும் கூலி, வீட்டுச் செலவுக்கே போதுமானதாக இல்லை. மாலையில் சிறுவன் வழக்கம்போல் வானொலிக் கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென அவன் அம்மாவுக்கு பிடித்த அந்த பாடல் ஒலிபரப்பாகியது. 'ஐயோ, அம்மா இன்னும் வரவில்லையே’ என வருத்தமடைந்த சிறுவன், வானொலியை உடனே அணைத்து விட்டான்.  அம்மா வரும்வரை காத்திருந்த சிறுவன், தன் தாய் வந்ததும் வராததுமாக, வானொலிப் பக்கம் அழைத்துச் சென்று, வானொலியை இயக்கினான். 'இதோ கேளுங்கள், நீங்கள் விரும்பும் பாட்டை' என உரைத்தான். ஆனால் அங்கோ, வேறு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 'நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக, நான்கூட கேட்காமல் அணைத்து வைத்திருந்தேன். எப்படி மறைந்தது' என்று அப்பாவியாக கேட்டான் மகன். தன் மகனின் பாசத்தை எண்ணி மகிழ்ந்த தாய் அவனை உச்சி முகர்ந்து, முத்தம் கொடுத்தார். மகன் நிறுத்தி வைத்த பாடல், அத்தாய்க்கு, எங்கோ தூரத்தில் கேட்பதுபோல் இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.