2017-06-28 16:55:00

தீவிரவாதத்தைத் தடுக்க தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்


ஜூன்,28,2017. தீவிரவாத முயற்சிகளும், வெறுப்புச் செய்திகளும் பரவுவதைத் தடுக்க, முகநூல், மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், மற்றும், யூடியூப் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து முயற்சிகள் எடுப்பதைக் குறித்து, ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் தன் மகிழ்வை வெளியிட்டார்.

தனி மனிதருக்கும், பொது வாழ்வுக்கும் இடையே நிலவும் தகவல் பரிமாற்றத்தில், வெறுப்புச் செய்திகளையும், தவறான வதந்திகளையும் பரப்பும் முயற்சிகளைத் தடை செய்வதற்கு, தகவல் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள் இணைந்து முயற்சிகள் மேற்கொள்வது குறித்து, ஐ.நா.வின் உதவித் தலைமைச் செயலர், Jean-Paul Laborde அவர்கள், தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத அமைப்புக்களின் மறைமுகமான செய்திப் பரிமாற்றங்கள், மற்றும், வெறுப்பைத் தூண்டிவிடும் வகையில் பரப்பப்படும் செய்திகள் ஆகியவற்றைத் தடைசெய்வதற்கு, 'தீவிரவாதத்திற்கு எதிராக உலக வலைத்தள அமைப்பை' உருவாக்கும் முயற்சியில், முன்னணித் தொழிநுட்ப நிறுவனங்கள் இணைந்துள்ளன என்று, இச்செவ்வாயன்று வெளியான ஐ.நா. செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

வெறுப்பை வளர்க்கும் செய்திகளைத் தடை செய்வதோடு, இத்தகையைச் செய்திகளை எவ்விதம் எதிர்கொள்வது என்ற வழிமுறைகளைச் சொல்லித் தருவதற்கும், முகநூல், மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், மற்றும், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.