2017-06-28 16:18:00

இத்தாலிய தொழில் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தத் திருத்தந்தை


ஜூன்,28,2017. மனித குல வரலாற்றில், கூட்டுறவு முயற்சிகளின் வெளிப்பாடாக விளங்குவது, பணியிடங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த தொழிலாளர் பிரதிநிதிகளிடம் கூறினார்.

CISL என்றழைக்கப்படும் இத்தாலிய தொழிலாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு, உரோம் நகரில் நடத்தும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் பிரதிநிதிகளை இப்புதன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வமைப்பு மேற்கொண்டுள்ள கூட்டத்திற்கு, "தனிநபருக்காக, வேலைக்காக" என்ற தலைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தனிநபரும், வேலையும் ஒன்றையொன்று சார்ந்தவை என்றும், வேலையில்லாத மனிதர்களும், மனிதர்களற்ற வேலைகளும் இன்றைய உலகில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன என்றும், திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

உற்பத்தி என்ற ஒரே இலக்கை மனதில் கொண்டு, வயது காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும், அதிக உற்பத்தியை வழங்க இயலாதவர்களை வேலையிலிருந்து விலக்குவது இன்றைய உலகில் வளர்ந்துவரும் மனிதாபிமானமற்ற நிலை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இளையோருக்கு வேலை வாய்ப்புக்கள் கூடும்போது, பணியிடங்களில் அதிகமான உயிர்துடிப்பும், சக்தியும் பெருகும் என்று கூறியத் திருத்தந்தை, வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளையோர், நம்பிக்கை இழந்து குறுக்கு வழிகளைத் தேடும் அவலத்தையும் குறித்து, தன் கவலையை வெளியிட்டார்.

தொலைநோக்குப் பார்வையும், புதிய வழிகளை உருவாக்கும் துணிவும் தொழிலாளர் இயக்கங்களுக்கு முன் உள்ள இரு சவால்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, இவ்விரு சவால்களையும் சந்திக்கும் துணிவு இயக்கங்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.