2017-06-27 15:05:00

ஜூன் 28ல் ஐந்து புதிய கர்தினால்கள்


ஜூன்,27,2017. “எதார்த்தத்தில் கடவுள் நமக்குக் காண்பிக்கும் அடையாளங்களைப் பார்ப்பதற்கென, நம் பார்வையை கூர்மைப்படுத்துவோம்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், ஜூன் 28, இப்புதன் மாலை நான்கு மணிக்கு, மாலி, இஸ்பெயின், சுவீடன், லாவோஸ், எல் சால்வதோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து ஆயர்கள் மற்றும், பேராயர்களை, புதிய கர்தினால்களாக உயர்த்தும் திருவழிபாட்டை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவாகிய ஜூன் 29, இவ்வியாழன் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதிய கர்தினால்கள், திருத்தந்தையோடு இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார்கள். இத்திருப்பலியில், பேராயர்கள் கழுத்தில் அணியும் பால்யம் எனப்படும் கழுத்துப்பட்டையும் ஆசீர்வதிக்கப்படும்.

ஆப்ரிக்காவின் மாலி நாட்டின் Bamako பேராயர் Jean Zerbo (73); இஸ்பெயினின் பார்செலோனா பேராயர் Juan Jose Omella (71); சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் ஆயர் Anders Arborelius (67); லாவோஸ் நாட்டின் Pakse அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் Louis-Marie Ling Mangkhanekhoun (73), எல் சால்வதோர் நாட்டின் சான் சால்வதோர் துணை ஆயர் Gregorio Rosa Chavez (74) ஆகியோர், புதிய கர்தினால்கள் ஆவர்.

கடந்த மே 21, ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின், இப்புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதிய கர்தினால்களுடன், திருஅவையில் மொத்தம் 225 கர்தினால்கள் இருப்பார்கள். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக மாறும். திருஅவை சட்டப்படி, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் மொத்தம் 120 பேர் இருக்க வேண்டும். ஆனால் இவ்வெண்ணிக்கை இப்புதனோடு ஒன்று அதிகமாக இருக்கும். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் காலத்தில், ஒரு கட்டத்தில், குறைந்தது பத்துப் பேர் அதிகமாக இருந்தனர்.

இப்புதனன்று, ஐரோப்பாவில் 53, ஆப்ரிக்கா, ஆசியா முறையே 15,  ஓசியானியாவில் 4, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா முறையே 17 என, 121 கர்தினால்கள், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.