2017-06-26 17:01:00

துன்பங்கள் என்பவை நற்செய்தி அறிவிப்பின் ஒரு பகுதி


ஜூன்,26,2017. வெற்றிக்குரிய வாக்குறுதிகளையோ, துன்பம் மற்றும் தோல்விகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற வாக்குறுதிகளையோ இயேசு தன் சீடர்களுக்கு வழங்கவில்லை, மாறாக, ஒதுக்கி வைக்கப்படலையும், சித்ரவதைகளையும் ஏற்க வேண்டியிருக்கும் என்பதை முன் மொழிந்தார் என்றார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மையமாக வைத்து ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு துன்பங்களை அனுபவித்து சிலுவையில் மரணமடைந்த இயேசுவின் வாழ்வோடு அவரின் சீடர்களின் வாழ்வும் ஒத்திணங்கிச் செல்லவேண்டும் என்றார்.

துன்பங்கள் என்பவை நற்செய்தி அறிவிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வேளையில், அத்துன்பங்களையே நம் விசுவாசத்தின் உண்மை நிலையாகவும், இயேசு கிறிஸ்துவுடன் நாம் கொண்டிருக்கும் உறவை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பாகவும் நோக்க வேண்டும்  எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையில், நற்செய்தி அறிவுப்புக்கான வாய்ப்பை நம் துன்பங்களில் கண்டுகொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய காலத்திலும் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவது தொடர்கிறது என்றும், அத்தகைய சித்ரவதைகள் மத்தியிலும் தங்கள் விசுவாசத்தை உறுதியுடன் பற்றி நற்செய்தி அறிவிப்பில் தீவிரமுடன் செயல்படும் அவர்களுக்கக செபிப்போம் என்றும் கூறினார்.

"நற்செய்தியின் உண்மைகளை, புறந்தள்ளி வாழும் மக்களைத் தட்டியெழுப்பும் பணியுடன், ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப்போல் நம்மை அனுப்பும் இறைகவன், 'அஞ்சாதீர்கள்' என்ற உறுதிமொழியையும் தந்து அனுப்புகிறார், என, தன் மூவேளை செப உரையில் மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.