2017-06-22 15:52:00

நெதர்லாந்து அரச தம்பதியருடன் திருத்தந்தை


ஜூன்,22,2017. நெதர்லாந்து நாட்டின் மன்னர் Willem-Alexander அவர்களையும், அவர் மனைவி Máxima  அவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து, ஏறத்தாழ 45 நிமிடங்கள் உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, இத்தாலியில் அரசு சார்ந்த பயணம் மேற்கொண்டுவரும், நெதர்லாந்து அரச தம்பதியர், இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்தபோது, நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சரும், வெளிநாடுகளுடன் வியாபாரம் மற்றும் ஒத்துழைப்பிற்கான அந்நாட்டின் அமைச்சரும் உடனிருந்தனர். திருத்தந்தைக்கும், மன்னருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலுக்கும், பரிசுப் பரிமாற்றங்களுக்கும் பின்னர், மன்னர் அலக்சாண்டர் அவர்கள், திருப்பீடச்செயலர் பியெத்ரோ பரோலின் அவர்களையும், வெளியுறவுச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகெர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

இரு நாடுகளின் முக்கியத் தலைவர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களில், இவ்வுலகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு, உதாரணமாக, மோதல்கள், ஏழ்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிபெயர்தல் போன்றவைகளுக்கு தீர்வு காண திருப்பீடம் ஆற்றிவரும் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.