2017-06-20 15:46:00

வளர்இளம் பருவப் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர் துணை நிற்க


ஜூன்,20,2017. உரோம் போன்ற மாநகரங்களில் வாழ்கின்ற குடும்பங்கள், கிராமப்புறப் பகுதிகளைவிட, மாறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதால், இந்நகரங்களில் வாழும் பெற்றோர், தங்களின் வளர்இளம் பிள்ளைகளை, மாநகரச் சூழலில், பயிற்றுவிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், இத்திங்கள் இரவு ஏழு மணிக்கு, உரோம் மறைமாவட்ட மாநாட்டை ஆரம்பித்து வைத்து, ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆற்றிய உரையில், இம்மாநாட்டின் தலைப்பை மையப்படுத்திப் பேசினார்.

‘வளர்இளம் பருவப் பிள்ளைகளைத் தனியாக விடாதீர்கள், அவர்களுக்குக் கல்வி வழங்குவதில், அவர்களுடன் இருப்பது’ என்ற இம்மாநாட்டின் தலைப்பு குறித்து விளக்கிய திருத்தந்தை, இப்பருவத்தினருக்கு ஆற்றப்படும் மேய்ப்புப்பணியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய கூறுகளையும் எடுத்துரைத்தார்.

தாங்கள் பின்பற்றக்கூடிய மனிதர்கள் இல்லாமையால், இளையோர் தங்கள் வளர்ச்சிப் பாதையைத் தடை செய்கின்றனர், அல்லது, தங்களையே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இளையோரைச் சென்றடைவதற்கு,  அவர்கள் பிரச்சனைகள் பற்றி, அவர்களிடம் பேசாமல் இருப்பது முதல் படி என்று கூறினார்.

மக்கள், தங்களின் பூர்வீகத்திலிருந்து தொடர்பற்று, சார்புநிலை உணர்வற்று இருக்கும் ஒரு சமுதாயத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சவாலை எதிர்நோக்குகின்றனர் எனவும், இளையோருக்குத் தேவைப்படும் சார்புணர்வை, தாத்தா பாட்டிகள் கொடுப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

மேலும், இம்மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்கு முன், உரோம் மறைமாவட்டத்தின் 38 பங்குத்தளங்கள் மற்றும், துறவற நிறுவனங்கள் அடைக்கலம் அளித்துள்ள, புலம்பெயர்ந்த குடும்பத்தினர் குழு ஒன்றையும், சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.