2017-06-20 14:56:00

கர்தினால் ஐவன் டயஸ் மரணம், திருத்தந்தை இரங்கல்


ஜூன்,20,2017. கர்தினால் ஐவன் டயஸ் (Ivan Dias) அவர்கள், மரணமடைந்ததையொட்டி, தனது ஆழ்ந்த இரங்கலையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் முன்னாள் தலைவரும், மும்பை உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயருமாகிய, கர்தினால் ஐவன் டயஸ் அவர்கள், ஜூன்,19, இத்திங்கள் இரவு எட்டு மணிக்கு, தனது 81வது வயதில் உரோம் நகரில் இயற்கை எய்தினார்.

கர்தினால் ஐவன் டயஸ் அவர்களின் சகோதரர் பிரான்சிஸ் டயஸ் அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், கர்தினால் டயஸ் அவர்கள், நீண்ட காலம் திருப்பீடத்திற்கு ஆற்றியுள்ள பிரமாணிக்கமுள்ள சேவைக்கு, குறிப்பாக, அல்பேனியாவில் துன்புறும் திருஅவையை, ஆன்மீக மற்றும், ஏனைய வழிகளில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக, அவர் தன் பணியில் வெளிப்படுத்திய மறைப்பணி ஆர்வத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இவர் ஆற்றிய பணிகளையும் பாராட்டி, அவ்வுயர்மறைமாவட்ட விசுவாசிகளுடன், தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும், ஞானமும், பணிவுமிக்க இந்த மேய்ப்பரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற, தான் செபிப்பதாகவும், தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தியாவின் மும்பை நகரில், 1936ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று பிறந்த கர்தினால் ஐவன் டயஸ் அவர்கள், 1958ம் ஆண்டில், மும்பை உயர்மறைமாவட்டத்திற்கென, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர், உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருப்பவர். 

திருப்பீடத்தின் தூதரகப் பணியில், 1964ம் ஆண்டில் இணைந்த இவர், திருப்பீடச் செயலகத்திலும், நார்டிக் நாடுகள், இந்தோனேசியா, மடகாஸ்கர், லா ரியூனியோன், கொமொரோஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்களிலும் பணியாற்றினார். பின் கொரியாவிலும்(1987-91), அல்பேனியாவிலும் (1991-97) திருப்பீட தூதராகப்  பணியாற்றினார் கர்தினால் டயஸ்.

1996ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக(1996-2006) நியமிக்கப்பட்ட இவர், 2001ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராகவும், உரோம் உர்பானியானம் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் பெரும் முதல்வராகவும் (மே 20,2006- மே 10,2011) பணியாற்றியுள்ளார்.

கர்தினால் ஐவன் டயஸ் அவர்களின் மறைவுக்குப்பின், திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 220 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 116 ஆகவும் உள்ளன.

நார்டிக் நாடுகள் (Nordic countries) என்பன, நார்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டினேவிய நாடுளையும், அத்துடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த கிரீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த Åland, மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த Jan Mayen தீவும், Svalbard தீவுகளும் இந்த நார்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.