2017-06-20 15:05:00

கர்தினால் ஐவன் டயஸ், இந்தியாவுக்கு ஓர் ஆசீர்வாதம்


ஜூன்,20,2017. மறைந்த கர்தினால் ஐவன் டயஸ் அவர்கள், இந்திய மக்களை அன்புகூர்ந்து, அம்மக்களின் முன்னேற்றம், மற்றும் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர், இன்னும், அவர், இந்தியாவுக்கு ஓர் ஆசீர்வாதம் எனப் புகழாராம் சூட்டினார், மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிய முதல் இந்தியர்,  

திருப்பீட செயலகம் மற்றும், உரோமையிலுள்ள சீனத் தூதரக உறுப்பினர்களுக்கிடையே உறவுகளைத் தொடங்கி வைத்தவர் கர்தினால் டயஸ் என, ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

கர்தினால் ஐவன் டயஸ் அவர்கள், அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்றும், இயேசுவின் மீது தணியாத் தாகம் கொண்டிருந்தவர் என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்தியத் திருஅவை, குறிப்பாக, மும்பை உயர்மறைமாவட்டம், கர்தினால் ஐவன் டயஸ் அவர்களின் ஆன்மா, நிறை சாந்தியடையச் செபிக்கின்றது என்றார்.

கர்தினால் ஐவன் டயஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் மீது, சிறப்பான அன்பு கொண்டு, குருத்துவக் கல்லூரிகளில், அவர்களின் பயிற்சிகள் குறித்து கவனம் செலுத்தியவர் எனவும், பணியில் பற்றுடையவர் எனவும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஜூன் 21, இப்புதன் மாலை 3 மணிக்கு, கர்தினால் டயஸ் அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலி நடைபெறும். இத்திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் டயஸ் அவர்களின் உடலை ஆசீர்வதிப்பார்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.