2017-06-19 15:24:00

போர்த்துக்கல் காட்டுத் தீயில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


ஜூன்,19,2017. போர்த்துக்கல் நாட்டின் Pedrógão Grande பகுதியில் பரவிவரும் காட்டுத் தீயில் பலியானவர்கள் மற்றும், காயமடைந்தவர்களை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், நினைவுகூர்ந்து, அவர்களுக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Pedrógão Grande பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது நான்கு குழந்தைகள் உட்பட, 62 பேர் பலியானதுடன், 59க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அந்நாட்டில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 156 இடங்களில் தீயணைப்பு மற்றும், மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன

மேலும், ஜூன் 20, இச்செவ்வாயன்று, ஐ.நா.வால் கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எக்காலத்தையும்விட இக்காலத்தில், புலம்பெயர்ந்தோர்க்கு அதிக ஆதரவு தேவைப்படுகின்றது என்று கூறினார்.

ஆயுத மோதல்கள், வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றுக்கு அஞ்சி, நாடுகளைவிட்டு வெளியேறும் மக்களையும், இவ்வாறு அம்மக்கள் மேற்கொள்ளும் ஆபத்தான கடல் மற்றும், தரைவழிப் பாதைகளில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்வோம் என்றும் திருத்தந்தை கூறினார்.

உரோம் நகரில், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு மற்றும், ஐ.நா. பிரதிநிதிகள் குழுவுக்கு, தனது சிறப்பு வாழ்த்தையும் திருத்தந்தை தெரிவித்தார், திருத்தந்தை.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.