2017-06-19 15:01:00

அமைதியின் நற்செய்தியை அறிவிப்பதற்கு தொழில்நுட்பங்கள் உதவ...


ஜூன்,19,2017. “நம்மில் எவருமே தீவு அல்ல, மற்றவரிலிருந்து தனித்து இயங்குபவரும் அல்ல. எல்லாரையும் உள்ளடக்கி, அனைவரும் ஒன்றிணைந்து நிற்பதால் மட்டுமே, வருங்காலத்தை அமைக்க முடியும்” என்ற செய்தியை, தன் டுவிட்டர் பக்கத்தில், ஜூன் 19, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கானடா நாட்டின் கியூபெக் நகரில், இத்திங்களன்று தொடங்கியுள்ள, SIGNIS கழகத்தின் உலக மாநாட்டிற்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 19, இத்திங்கள் முதல், நான்கு நாள்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், அமைதியின் நற்செய்தியை உலகளாவிய திருஅவை அறிவிக்கும் பணியில் ஒத்துழைப்பதற்கு, அனைத்து தொழில்நுட்ப மற்றும், சமூக வலைத்தளங்கள் உதவும் வழிகளைத் தொடர்ந்து தேட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அமைதிக் கலாச்சாரத்திற்கு ஊடகம், நம்பிக்கை கதைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில், இம்மாநாடு நடைபெறுவது பற்றியும் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இம்மாநாட்டில் பகிரப்படும் நம்பிக்கை கதைகள், அனைவரிலும் நம்பிக்கையைத் தூண்டும் என்ற எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார். 

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீட சமூக ஊடகத்துறை செயலகத் தலைவர், பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

SIGNIS என்ற உலக கத்தோலிக்க மக்கள்தொடர்பு கழகம், 1928ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உலக கத்தோலிக்க திரைப்பட நிறுவனம் (OCIC), உலக கத்தோலிக்க வானொலி, தொலைக்காட்சி கழகம் (UNDA) ஆகிய இரண்டும், 2001ம் ஆண்டு நவம்பரிலிருந்து, ஒன்றாக இணைக்கப்பட்டு, SIGNIS (உலக கத்தோலிக்க மக்கள்தொடர்பு கழகம்) என்ற பெயரில் இயங்கி வருகிறது. இது, 122 நாடுகளில், 150 உறுப்பு கழகங்கள் மற்றும் 76 இணை கழகங்களைக் கொண்டுள்ளது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.