2017-06-17 15:05:00

மாஃபியாவுக்கு எதிரான நடவடிக்கையில் மனித மாண்பு காக்கப்பட..


ஜூன்,17,2017. ஊழல் மற்றும், மாஃபியா திட்டமிட்ட குற்றக் கும்பலுக்கு எதிரான நடவடிக்கை, சட்டப்படியானது மட்டுமல்ல, கலாச்சாரம் சார்ந்ததுமாகும் என, வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.

ஊழல் பற்றிய பன்னாட்டு கலந்துரையாடல் என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வத்திக்கானில் இவ்வாரத்தில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கு பற்றி, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு பற்றிப் பேசிய இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஊழல் மற்றும், மாஃபியாவுக்கு எதிரான நடவடிக்கையில், மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும் மற்றும், மனிதரின் மாண்பை நாம் ஒருபோதும் நசுக்க முடியாது என்று கூறினார்.

மேலும், இக்கருத்தரங்கு பற்றிப் பேசிய, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஊழல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊழலை ஒழிப்பதில் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும், இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

ஊழலை ஒழிப்பதில், கொள்கைகளும், சட்டங்களும் வகுக்கப்படுவதன் வழியாக, அந்த இலக்கை எட்ட முடியும் எனவும், பேராயர் தொமாசி அவர்கள், கூறினார்.

உலகளாவிய ஊழல் பிரச்சனை குறித்து சிந்திப்பதற்காக, முதல் முறையாக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவரல்லாதவர்கள், திருஅவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், நீதிபதிகள், காவல்துறைப் பிரதிநிதிகள், பல்வேறு இயக்கங்கள் மற்றும், நிறுவனங்களின் உறுப்பினர்கள், குற்றத்திற்குப் பலியானவர்கள், செய்தியாளர்கள், அறிஞர்கள், திருப்பீடத்திற்கான அரசியல் தூதர்கள் என, ஏறக்குறைய ஐம்பது பேர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.