2017-06-16 15:45:00

பாசமுள்ள பார்வையில்...: விதிவிலக்குகள் விதிமுறையாக முடியாது


தன் குடும்பத்தினரால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த மனிதன் ஒருவன், முனிவர் ஒருவரை அணுகினான். “தாயை வணங்கு; தந்தையைத் தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலில் சென்று அடையும் புண்ணியத்தைவிடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்" என்றெல்லாம் கூறுகிறீர்களே, குணங்கெட்ட தாய் என்று எவரும் இல்லையா, அத்தகைய தாயையும், அவர் நம்மைப் பெற்றெடுத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக வணங்கத்தான் வேண்டுமா, என்று கேட்டான். அந்த முனிவர் சொன்னார், 'நீ கேட்பது முறையே. தாய் என்பது தன்னலமற்ற பாசத்தின் மறு பெயர். அங்கு பாசமே இல்லாதபோது, என்ன செய்வது?  மலர் என்றால்  நமக்கு வழக்கமாக, மணமும் அழகும்தான் நினைவுக்கு வருகின்றது. ஆனால், எல்லா மலரும் மணம் தருவதில்லை. துர்நாற்றம் வீசும் மலர்கூட உள்ளது. இருப்பினும் அதையும் மலர் என்றுதான் அழைக்கின்றோம். கோடியில் ஒன்று அப்படியிருக்கலாம். ஏனெனில், எந்த நியதியிலும் விதிவிலக்கு உண்டு.

‘மூன்று தலையோடு கன்றுகுட்டி, ஐந்து குலை தள்ளுகிற வாழை மரம், என்றெல்லாம் உண்டு. ஏன்,  சொந்தக் கன்றுகளையே முட்டித் தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை. கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவரும், செங்கல் பொடிகளைத் தின்று ஒருவரும் உயிர் வாழ்ந்தது உண்டு. வாழ்வில் ஒரு மணி நேரம்கூட தூங்காமல் ஒருவர் உயிர் வாழ்ந்ததும் உண்டு.   ஆகவே, விதி விலக்குகளை நிரந்தரம் என ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் எப்படி இலட்சத்திலோ, கோடியிலோ ஒருவராகக் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.  அதற்காக, தாய்க்குலத்தையே வெறுக்கக் கூடாது.

பூமியைப் ‘பூமாதா’ என்றும், பசுவைக் ‘கோமாதா’ என்றும் வர்ணிக்கின்றோம்.

‘பொறுமையில் பூமாதேவி’ என்றும்,  அமைதியில் ‘பசு’ என்றும் சொல்கின்றோம். ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பதே மரபு.

பொறுமை, அமைதி, இரத்தபாசம், தன் வயிறைப் பட்டினி போட்டு குழந்தைக்கு ஊட்டுதல் - இவையே தாய்மை!

தனிப்பட்ட அனுபவங்கள் ஏதாவது ஒரு சில நேரங்களில் வேறுபடலாம். அதற்காக, தாய்மையை பழித்தல் மாபெரும் தவறு” என முடித்தார் முனிவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.