2017-06-14 15:31:00

போர்கள் நிறுத்தப்பட செபம், தவம் அதிகம் தேவை


ஜூன்,14,2017. “மக்கள் மனமாற்றம் அடையவும், உலகெங்கும் இடம்பெறும் பல போர்கள் நிறுத்தப்படவும் இறையருளை இறைஞ்சுவதற்கு, செபம் மற்றும் தவம் அதிகம் தேவைப்படுகின்றது” என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று எழுதியுள்ளார்.

மேலும், உலகில் இடம்பெற்றுவரும் போர்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு, நாம் எல்லாரும் செபம் மற்றும், தவம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, அமைதியைக் கொணரும் பணிகளின்போது, உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்களை, இப்புதனன்று சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின் அனைத்துத் திருப்பயணிகளையும் வாழ்த்தியவேளை, இவ்வாறு நினைவுகூர்ந்த திருத்தந்தை, இக்குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

1990, 91ம் ஆண்டுகளில் நடந்த வளைகுடா சண்டையில் மட்டும், அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினர் 22 இலட்சத்து 25 ஆயிரம் பேர் பணியாற்றினர், இவர்களில் 2,586 பேர் உயிரிழந்தனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 

இன்னும், உரோம் மறைமாவட்ட மாநாட்டை, ஜூன் 19, வருகிற திங்களன்று, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆரம்பித்து வைப்பார் என, அம்மறைமாவட்ட தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களின் நாம விழாவுக்கு, வாழ்த்து ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.