2017-06-14 16:13:00

பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் விடுதலைக்காக கத்தோலிக்க ஆயர்கள்


ஜூன்,14,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மின்டனாவோ தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள, கிறிஸ்தவ சபை ஆயர் கார்லோஸ் மொராலெஸ் (Carlos Morales) அவர்கள் விடுதலை செய்யப்படுமாறு, பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ சபைகள் ஆயர்கள் அமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய கத்தோலிக்க ஆயர் தேயோகிராசியாஸ் இனிகுவெஸ் (Deogracias Iniguez) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆயர் மொராலெஸ் உட்பட அந்நாட்டின் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுமாறு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.

நீதியான அமைதி மற்றும், மனித உரிமைகளுக்காக, அனைத்துக்  கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என, ஆயர் இனிகுவெஸ் அவர்கள் மேலும் கூறினார்.

மின்டனாவோ Independent கிறிஸ்தவ சபை ஆயர் மொராலெஸ் அவர்கள், கம்யூனிச புரட்சித் தலைவருக்கு உதவுகிறார் மற்றும், சட்டத்திற்குப் புறம்பே வெடிகுண்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கடந்த மே 11ம் தேதி, பாதுகாப்புப் படைகளால் கைதுசெய்யப்பட்டார்.

ஆயர் மொராலெஸ் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி, ஜூன் 12, இத்திங்களன்று மனிலாவில், ஆயர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு பேரணி ஒன்றை நடத்தியது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.