2017-06-14 16:15:00

தானமாக இரத்தம் கொடுங்கள், இப்பொழுதே கொடுங்கள்


ஜூன்,14,2017. தானமாக இரத்தம் கொடுங்கள், இப்பொழுதே அதைக் கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள் என்ற தலைப்பில், உலக இரத்த தான தினம், ஜூன் 14, இப்புதனன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

இத்தினத்தை முன்னிட்டு தகவல்களை வெளியிட்டுள்ள, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம், உலகில் ஒவ்வோர் ஆண்டும், இரத்த தானம் வழங்கும் 11 கோடியே 25 இலட்சம் பேரில் பாதிப்பேர், அதிக வருவாய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது.

உலகில், 57 நாடுகள், தங்களுக்குத் தேவைப்படும் நூறு விழுக்காடு இரத்தத்தை, தன்னார்வ மற்றும், இலவசமாக வழங்கும் நபர்களிடமிருந்து பெறுகின்றன எனவும், ஒரு நாட்டில் ஒரு விழுக்காட்டு மக்கள் வழங்கும் இரத்தத்தைக் கொண்டு, அந்நாட்டிற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் இரத்த அளவை நிறைவேற்ற முடியும் எனவும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

உலகளவில் அவசரநிலையின்போது இரத்தம் கிடைக்காமல், கடந்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 25 கோடி பேர் அவசர நிலையை சந்திக்கின்றனர்.

தானாக முன்வந்து இலவசமாக வழங்குதல், உறவினர்களுக்காக வழங்குதல், பணத்துக்காக வழங்குதல் என மூன்று வழிகளில் ரத்ததானம் வழங்கப்படுகிறது.

176 நாடுகளில் 13,000 இரத்த மையங்கள் வழியாக. 11 கோடிப் பேர் இரத்த தானம் செய்துள்ளனர். ஓர் ஆண்டுக்கு பெண்கள் மூன்று முறையும், ஆண்கள் நான்கு முறையும் இரத்ததானம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.