2017-06-14 15:59:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 21


ஜூன்,15,2017. திருத்தூதர் பவுல், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக மூன்று பெரிய நற்செய்தி பயணங்களை மேற்கொண்டார். இக்காலத்திய இஸ்ரேல், சிரியா, துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகள் வழியாக, நீரிலும் நிலத்திலும், கடினமான பயணங்களை இவர் மேற்கொண்டார். இவற்றில், இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மைல்கள் பயணம் செய்துள்ளார் என, விவிலிய விரிவுரையாளர்கள் சொல்கின்றனர். அக்காலத்தில், உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்துவந்த உரோமையர்கள், தங்களின் பேரரசு பகுதி, தங்களின் கட்டுப்பாட்டிலே இருக்கவேண்டுமென விரும்பியதால், அதற்கேற்ப அவர்கள் சாலைகளை அமைத்தனர். திருத்தூதர் பவுல், தனது நற்செய்திப் பயணங்களுக்கு இச்சாலைகளையே பயன்படுத்தினார் எனச் சொல்லப்படுகிறது. All Roads Lead to Rome அதாவது, எல்லாச் சாலைகளும் உரோம் நகருக்கு இட்டுச் செல்லும் என்ற சொல்வழக்குக்கூட ஒன்று உள்ளது. இதற்கு, 12ம் நூற்றாண்டு பிரெஞ்ச் இறையியலாளர் Alain deLille என்பவர், ஓர் ஆயிரம் சாலைகள் மக்களை உரோமைக்கு என்றென்றும் அழைத்துச் செல்லும் என விளக்கமளித்திருக்கிறார். ஆயினும் இக்கூற்றை உரோமையர்கள் பயன்படுத்தினார்களா என்பது சந்தேகமே என்கிறார்கள். எனினும், உரோமைப் பேரரசர் சீசர் அகுஸ்துஸ், உரோம் நகரின் மையத்தில், Miliarium Aureum அதாவது பொன் மைல்கல் எனப்படும் நினைவுச்சின்னத்தை எழுப்பினார். உரோமைப் பேரரசில், எல்லாத் தூரங்களும் இந்த மைல்கல்லிலிருந்தே அளக்கப்பட்டன என, பலர் நம்புகின்றனர். இந்த நினைவுச்சின்னத்தை இன்றும் உரோமையில், Roman Forum என்ற பகுதியில் காணலாம். இத்தாலியில் எல்லா முக்கிய நகரங்களும் உரோம் நகரோடு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்காலத்தில், கொள்ளைக்கூட்டத்தினரால் ஆபத்து அதிகம் இருந்ததால், பயணிகள் குழுவாகப் பயணம் செய்வது வழக்கம். இவர்கள், வழியில் அமைந்திருக்கும் தங்கும் விடுதிகளுக்கு விரைந்து சென்று, கிடைக்கும் உணவை உண்டனர். கடலில் பயணம் செய்வதும் அவ்வளவு வசதியானதாக இல்லை. கப்பல்களில் பயணிகளுக்கென சிறிய அறைகள் உண்டு. வெயில், வெப்பம், காற்று, மழை இவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பயணிகள், கப்பலின் கீழ்தளத்தில் அடைக்கலம் தேடுவர். திருத்தூதர் பவுல், கூடாரம் அமைக்கும் தொழிலைக் கற்றவர். அவர் தனது நற்செய்திப் பயணங்களில், தனது மற்றும் தன்னோடு இருந்தவர்களின் உணவுக்காக அத்தொழிலைச் செய்தார். இவர் அமைத்த கூடாரங்கள், கப்பல் பயணத்தில், இவருக்கும், இவரோடு சென்றவர்களுக்கும் உதவியிருக்கலாம் எனச் சொல்கிறார்கள். ஆயினும், தான் மேற்கொண்ட நற்செய்திப் பயணங்களில், எவ்வளவு ஆபத்துக்களை எதிர்கொண்டார் என, பவுல், கொரிந்து கிறிஸ்தவர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதம், பிரிவு 11, 25 முதல் 27 வரையுள்ள திருச்சொற்களில் விளக்குகிறார்.

பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்.

திருத்தூதர் பவுல், தனது இரண்டாவது நற்செய்தி பயணத்தில், இஜியன் கடலைக் (Aegean Sea)கடந்து தற்போதைய கிரேக்க நாட்டிற்குச் சென்றார். இந்தக் கடல், துருக்கி நாட்டிற்கும், கிரேக்க நாட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. இக்கடலுக்கு வடக்கே, மார்மரா கடலும், கருங்கடலும் அமைந்துள்ளன. பவுல், கிரேக்க நாட்டில், வரலாற்று புகழ்பெற்ற ஏத்தென்ஸ் நகரில் நற்செய்தி அறிவித்தார். அந்நகரில், சிலைகள் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கினார். எனவே அவர் தொழுகைக் கூடத்தில் யூதர்களோடும் கடவுளை வழிபடுவோரோடும், சந்தை வெளிகளில் சந்தித்த மக்களோடும் ஒவ்வொரு நாளும் விவாதித்து வந்தார். எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்யியல் அறிஞர்கள் சிலர் அவருடன் கலந்துரையாடினர். வேறு சிலர், “இவன் என்னதான் பிதற்றுகிறான்?” என்றனர். அவர் இயேசுவையும் அவரது உயிர்த்தெழுதலையும் நற்செய்தியாக அறிவித்து வந்ததால் மற்றும் சிலர், “இவன் வேற்றுத் தெய்வங்களைப் பற்றி அறிவிப்பவன் போலத் தெரிகிறது”என்றனர். பின்பு அவர்கள் அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், “நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றார்கள். ஏத்தென்ஸ் நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அன்னியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர் (தி.பணி.17:16-21).

அரிஸ்டாட்டில், சாக்ரட்டீஸ், பிளேட்டோ போன்ற வரலாற்று புகழ்பெற்ற கிரேக்க மெய்யியல் அறிஞர்கள் வாழ்ந்த ஏத்தென்ஸ் நகரில் திருத்தூதர் பவுல், ஆற்றிய உரையை அடுத்த வார நிகழ்ச்சியில் கேட்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.