2017-06-13 15:46:00

உப்பாகவும் ஒளியாகவும் செயல்பட திருத்தந்தை அழைப்பு


ஜூன்,13,2017. கிறிஸ்தவ சாட்சியம் என்பது, செயற்கையான காப்பீட்டுமுறைகள் அல்ல, மாறாக, உப்பாகவும் ஒளியாகவும் இருத்தலேயாகும் என, இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயற்கையான வாக்குறுதிகளில் தங்கள் நம்பிக்கையைக் கொள்ளாமல், தூய ஆவியாரில் நம்பிக்கையை வைத்திருப்பவர்களாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'ஆம்' என்பதையும், 'உப்பு' என்பதையும், 'ஒளி' என்பதையும் மையமாக வைத்து மறையுரை வழங்கினார்.

பிறருக்கு உப்பாகவும் ஒளியாகவும் இருந்து, நம் வாழ்வில் இறைவனை மகிமைப்படுத்துவோம் என்ற திருத்தந்தை, கிறிஸ்தவ சாட்சியம் நோக்கி தூய ஆவியாரே நம்மை வழிநடத்திச் செல்கின்றார் எனவும் எடுத்துரைத்தார்.

'ஆம்' என்ற வார்த்தையையே எப்போதும் தந்தையாம் இறைவனின் மகிமைக்காகப் பயன்படுத்திய இயேசுவின் சீடர்களாகிய நாம், 'இல்லை' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், இயேசுவின் 'ஆம்' என்ற பதத்தையே பகிர்வோம் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்துமே நேர்மறையானவைகளாக இருத்தல் வேண்டும், ஒளியை ஏற்றி பிறருடன் பகிர்வதாகவும், உப்பை பிறர் வாழ்வில் ருசியூட்ட கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் பதில்கள், ஆம் என்றால் ஆம், இல்லை என்றால், இல்லை என்பதாக இருக்கட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் எடுத்தியம்பினார்.

"பிறருக்கு ஒளியாகவும், உணவு கெட்டுப்போவதிலிருந்து காக்கும் உப்பாகவும், நாம் செயல்படும்போது, கிறிஸ்தவ சாட்சியங்களாக விளங்குகிறோம் என்ற திருத்தந்தை, ,இயேசுவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதே, நம் பாதுகாப்பின் உறுதிப்பாடு எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.