2017-06-09 16:22:00

அயர்லாந்தில் புனித அன்னை தெரேசாவின் புனிதப்பொருள் பயணம்


ஜூன்,09,2017. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் புனிதராக உயர்த்தப்பட்ட புனித அன்னை தெரேசாவின் இரத்தத் துளிகள் பதிந்த ஒரு துணி, புனிதப் பொருளாக, ஜூன் 8 இவ்வியாழன் முதல், அயர்லாந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு, பவனியாக எடுத்துச் செல்லப்படுகிறது.

ஜூன் 8 வியாழன் மாலை 7.30 மணிக்கு Armagh நகரிலுள்ள புனித பேட்ரிக் பேராலயத்தை அடைந்த புனிதப் பொருள், இவ்வெள்ளியன்று Newry நகருக்கும், ஜூன் 12 Belfast நகருக்கும் பயணமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1910ம் ஆண்டு, மாசிடோனியா நாட்டில், ஆக்னெஸ் என்ற இயற்பெயருடன் பிறந்த அன்னை தெரேசா அவர்கள், தன் 18வது வயதில், அயர்லாந்து நாட்டில், லொரேட்டோ அருள் சகோதரிகள் சபையில் இணைந்து, 1929ம் ஆண்டு, இந்தியாவுக்கு கல்விப் பணியாற்ற சென்றார்.

வறியோர் நடுவே உழைப்பதற்கென, பிறரன்பு மறைப்பணியாளர் சகோதரிகள் துறவு சபையை 1950ம் ஆண்டு நிறுவி, 1997ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்ட புனித அன்னை தெரேசா அவர்களின் புனிதப் பொருள், அயர்லாந்தில் தன் பயணத்தை நிறைவு செய்து, Newry நகரில் உள்ள பேராலயத்தில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : The Irish News / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.