2017-06-08 14:23:00

பாசமுள்ள பார்வையில்.. ஒரு தாயின் இறை நம்பிக்கை


உரோம் நகரின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் எண்பது வயது நிரம்பிய தாய் ஒருவர், அங்குப் பணியாற்றும் செவிலியர் ஒருவரிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் எனது ஐந்து வயதில் தந்தையை இழந்தேன். அதன்பின், என் தாய், தனியாளாக,  என்னை மிகவும் கஷ்டப்பட்டு அன்போடு வளர்த்து ஆளாக்கினார். பருவம் அடைந்து அழகிய இளம் பெண்ணாக வளர்ந்துவந்த நான், ஒருவரை அன்புகூர்ந்தேன். அவரும் என்மீது மிகுந்த பாசம் காட்டுவதுபோல் இருந்தது. அந்த நம்பிக்கையில் என்னை அவரிடம் இழந்தேன். நான் கருவுற்றுள்ளேன் எனக் கூறியபோது, அவர் எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என ஒதுங்கிச் சென்றுவிட்டார். திருமணமாகாமல் குழந்தைக்குத் தாயான என்னை, எனது ஊரில், பலரும் பலவாறு ஏளனமாகப் பேசினார்கள். என் தாய் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, என்னையும், நான் பெற்றெடுத்த பெண் குழந்தையையும் ஏற்றார். என் தாயோடு நாங்கள் வாழ்ந்தோம். என் பிள்ளையை வளர்த்து, காவல்துறை பணிக்குப் படிக்க வைத்தேன். நான் என் வாழ்வின் துன்பநேரங்களில், ஓர் ஆலயம் சென்று, சிலுவையில் தொங்கும் இயேசுவிடம் செபிப்பேன். அவர்தான் எனக்கு இத்தனை காலமும் என்னை அற்புதமாய் வழிநடத்தி வருகிறார். என் மகள் அன்று உரோம் பன்னாட்டு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்காக நேர்காணலுக்குச் சென்றாள். அப்போது தனது வாகனத்தை நிறுத்துவதற்காகச் சென்ற என் மகள், இன்னொருவர் அந்த இடத்திற்கு வந்ததும், காத்து இருந்தாள். அந்த மனிதர் தனது வாகனத்தை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு, என் மகளிடம், நீ இப்போது எங்கே செல்கிறாய் எனக் கேட்டுள்ளார். அவளும் விவரத்தைச் சொல்ல, அங்குப் போய் என் பெயரைச் சொல் என்றுமட்டும் சொல்லி அவர் சென்றுவிட்டார். அந்த மனிதர் யார் என்றே என் மகளுக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. என் மகளும் அவ்வாறே சொல்ல, உடனடியாக என் மகளுக்கு வேலையும் கிடைத்தது. இப்போது என் மகள் அந்த விமான நிலைய காவல்துறை பணியில் வேலை செய்கிறாள். என் மகள் நேர்காணலுக்குச் சென்ற அந்த நாள் முழுவதும், நான் இயேசுவிடம் மிக உருக்கமாகச் செபித்துக் கொண்டிருந்தேன்.

இந்தத் தாயின் பகிர்வைக் கேட்கும்போது, நம்மிலுள்ள இறை நம்பிக்கையும் ஆழமாகிறதல்லவா! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.