2017-06-08 14:42:00

உலகச் சுற்றுச்சூழலைக் குறித்து முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு


ஜூன்,08,2017. சுத்தமான ஆறுகள், சுத்தமான உலகையும், சுத்தமான சுற்றுச்சூழல் சுத்தமான சமுதாயத்தையும், சுத்தமான வர்த்தகம் சுத்தமான உள்ளத்தையும் வெளிப்படுத்துகிறது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், வத்திக்கான் நாளிதழ் "L'Osservatore Romano"வுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஜூன் 5, கடந்த திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி முதுபெரும் தந்தை வழங்கிய இப்பேட்டியில், கிரேக்க நாட்டின் Beozia பகுதியில் ஓடும் Aspio ஆற்றை சுத்தம் செய்யும் முயற்சியைக் குறித்துப் பேசினார்.

Aspio ஆற்றில் கலந்துள்ள கழிவுகளுக்கு அரசு, வர்த்தகத் துறை இரண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், இந்த ஆற்றைக் காக்கும் பொறுப்பு, அரசு, வர்த்தகம், கல்வித்துறை, மத நிறுவனங்கள் அனைத்தையும் சாரும் என்று எடுத்துரைத்தார்.

Aspio ஆற்றின் சீரழிவு, உலக சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஓர் உருவகமாக உள்ளது என்று கூறிய முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், நாம் அழித்துவரும் இயற்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும் நம் அவசரக் கடமை என்று வலியுறுத்தினார்.

பர்த்தலோமேயு அவர்கள், 1991ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டத்திலிருந்து, சுற்றுச்சூழல் மீது, அவர் தனிப்பட்ட அக்கறை செலுத்தி வந்துள்ளார் என்று வத்திக்கான் நாளிதழ் "L'Osservatore Romano" கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.