2017-06-07 16:23:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 20


ஜூன்,07,2017. லிஸ்திரா என்பது, அக்கால உரோமைப் பேரரசின், அனத்தோலியா மாநிலத்தைச் சேர்ந்த நகரமாகும். இந்நகரம், தற்போதைய துருக்கி நாட்டில், Klistra என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு திருத்தூதர் பவுல், பர்னபாவுடன் சேர்ந்து நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருந்தார். அந்நேரத்தில், பவுல், பிறவியிலேயே கால் ஊனமுற்ற ஒருவருக்குக் குணமளித்தார். அதைப் பார்த்த கூட்டத்தினர், இவ்விருவரையும் தெய்வங்கள் என நினைத்து கூக்குரலிட்டனர். அந்நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர், காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டுவந்து கூட்டத்தினருடன் சோந்து பலியிட விரும்பினார். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பவுல், தாங்களும் அவர்களைப்போன்ற மனிதர்களே என்பதை தெளிவுபடுத்தினார். உண்மைக் கடவுள் பற்றியும் எடுத்துச் சொன்னார் பவுல். இதன்வழியாக, கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு பவுலுக்கு தடுக்க முடிந்தது. அப்போது அந்தியோக்கியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்போட்டார்கள். ஆயினும், சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது பவுல் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவ்விருவரும், நற்செய்தியை அறிவித்து, பலரைச் சீடர்களாக உருவாக்கினார்கள். தெருபையில் சிலநாள்கள் தங்கியபின், பவுலும், பர்னபாவும், இந்நற்செய்தி பயணத்தை முதலில் தொடங்கிய இடத்திற்கே வந்தனர். அதாவது, அந்தியோக்கியாவிற்கு இவர்கள் கப்பல் பயணத்தைத் தொடங்கிய அத்தாலியாவுக்கு வந்தனர். திருத்தூதர் பவுலின் இந்த முதல் நற்செய்தி பயணம், 18 மாதங்கள் நீடித்தன. இது நடந்தது கி.பி.47ம் ஆண்டில்.

திருத்தூதர் பவுல், மூன்று பெரிய நற்செய்தி பயணங்களை மேற்கொண்டார். இரண்டாவது நற்செய்தி பயணத்தை, சிரியாவின் அந்தியோக்கியாவிலிருந்து ஆரம்பித்தார் பவுல். இப்பயணம், கி.பி.49ம் ஆண்டு முதல், 51ம் ஆண்டுவரை இடம்பெற்றது. இப்பயணத்தில், பவுல் சீலாவைத் துணைக்கு அழைத்துச் சென்றார்.   முதல் நற்செய்தி பயணத்தில் அவர் நற்செய்தி அறிவித்த நகரங்களில் சிலவற்றை பார்வையிட விரும்பினார். இதனால், தர்சு, தெருபை, லிஸ்திரா, இன்னும், கலாத்தியாவிலுள்ள சில நகரங்களுக்கும் சென்று, கிறிஸ்துவை விசுவசித்த அம்மக்களின் விசுவாசத்தை மேலும் ஊக்கப்படுத்தினார். பின்னர் பவுல், உரோமைப் பேரரசின் ஆசிய மாநிலத்திற்குச் செல்ல விரும்பினார். ஆனால் அங்குச் செல்வதற்குத் தூய ஆவியாரால் தடை செய்யப்பட்டார். பின்னர், பித்தினியா பகுதிக்குச் செல்ல விரும்பினார். அங்கும் அவரைச் செல்லவிடாமல்  தூய ஆவியார் தடை செய்தார். அதேநேரம், பவுலும், அவருடன் இருந்தவர்களும் துரோவா நகர் நோக்கி வழிநடத்தப்பட்டனர். இந்நகரம், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் முக்கிய இடமாகும். பவுல், துரோவா நகரை அடைந்தபோது, அந்தப் புகழ்பெற்ற கனவைக் கண்டார். அந்தக் கனவில் பவுல் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினார். இவ்வாறு, திருத்தூதர் பவுல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு நற்செய்தியை எடுத்துச் சென்றார்.

திருத்தூதர் பவுலும், அவருடன் இருந்தவர்களும், துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திரா தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றனர். இச்சமயத்தில், நற்செய்தியாளரும், திருத்தூதர் பணிகள் நூலை எழுதியவருமான லூக்காவும், இவர்களுடன் இணைந்து கொண்டார். இக்குழுவினர், அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றனர். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிருந்தனர். அந்நகரில், லீதியா என்ற பெண்ணைச் சந்தித்தார் பவுல். இப்பெண், செந்நிற ஆடைகளை விற்கும் செல்வந்தர்,  கடவுளை வழிபட்டு வந்தவர். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். லீதியாவும், அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். பிலிப்பி நகரில், குறி சொல்லும் ஆவியைத் தம்முள் கொண்ட அடிமைப்பெண் ஒருவரைச் சந்தித்து அப்பெண்ணை ஆட்கொண்டிருந்த தீய ஆவியையும் அகற்றினார் பவுல். இதனால், அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் திருமுழுக்குப் பெற்றனர். இதனால், இப்பெண்ணை, அடிமையாக வைத்து, மிகுதியான வருவாய் ஈட்டியவர்கள், பவுலுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டனர். 

பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளிக்குத் தம் ஆட்சியாளரிடம் இழுத்துச் சென்று, தலைமை நடுவர்கள் முன் அவர்களை நிறுத்தி, “இவர்கள் யூதர்கள்; நமது நகரில் கலகம் விளைவிக்கிறார்கள். உரோமையராகிய நாம் ஏற்றுக் கொள்ளவோ செயல்படுத்தவோ தகாத முறைமைகளை இவர்கள் அறிவிக்கிறார்கள்” என்றனர். உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளி, கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர், அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.