2017-06-05 16:08:00

மன்னிப்பே அனைத்திலும் உயர்ந்த அன்பு - திருத்தந்தை மறையுரை


ஜூன்,05,2017. இயேசுவின் சீடர்களை புதிய மக்களாக உருவாக்குபவராகவும், அவர்களுக்கு புதிய இதயங்களை வழங்குபவராகவும் செயல்படுகிறார், தூய ஆவியானவர் என தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகம் முழுவதும் திரு அவையில் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தூய ஆவியார் வருகைப் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மரையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்மைத்தன்மை உடையதாகவும் ஒன்றிப்பில் நிலைத்திருப்பதாகவும் இருக்கும் திருஅவையில் உள்ள அங்கத்தினர்கள், தங்களுக்கென சார்பு நிலைகளை எடுக்காமல், கிறிஸ்துவின் பக்கம் இருப்பவர்களாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மன்னிப்பே அனைத்திலும் உயர்ந்த அன்பு என செயல்படும் தூய அவியானவர், அந்த அன்பின் வழியாகவே அனைத்தையும் பலப்படுத்துகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொருவர் மீதும் இறங்கி வந்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வரங்களை வழங்கும் தூய ஆவியார், அனைவரையும் ஒன்றிணைப்பவராக உள்ளார் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்மைத்தன்மையுடன் ஒன்றிப்பைக் கொண்டிருக்க வேண்டிய நாம், பன்மைத்தன்மையை ஒதுக்கி வைக்கும் ஒன்றிப்பிற்கான சோதனையை விட்டு விலகுவோம் எனவும் கூறினார்.

திருஅவையின் நலனை மனதில் கொண்டவர்களாக, நம் தனிப்பட்ட விருப்புக்களை விட்டுக்கொடுத்து, ஒன்றிப்பைப் பெறுவதற்கான அருளை தூய ஆவியாரிடம் வேண்டுவதே நம் செபமாக இருக்கட்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றிப்பை வழங்கும் தூய ஆவியாரின் மற்றொரு கொடையான மன்னிப்பு குறித்தும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.