2017-06-03 15:57:00

மராவியில் பிணையல் கைதிகள் ஆபத்தில்..


ஜூன்,03,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலாவில் பொழுதுபோக்கு இடம் ஒன்று பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கும்வேளை, அந்நாட்டின் மராவி நகரை தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக, மோதல்கள் தீவிரமடைந்துள்ளன என்று, மராவி ஆயர் எட்வின் தெ லா பேனா அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

மராவியில், பிணையல் கைதிகளாக அண்மையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ள ஓர் அருள்பணியாளர் மற்றும், 15 கத்தோலிக்கர் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும், இவர்களைக்  கடத்தியவர்கள், அந்த அருள்பணியாளரின் தலையை வெட்டி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர் என்றும், ஆயர் பேனா அவர்கள் தெரிவித்தார்.

மராவியில் கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளர் Chito Suganob அவர்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, தன்னுடன் இருப்பவர்களையும் ஊக்கப்படுத்த இறைவனிடம் செபிப்போம் என்றும், மராவி ஆயர் கூறினார்.

மனிலா விமான நிலையத்துக்கு அருகிலுள்ள பொழுதுபோக்கு வளாகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 36 பேர் இறந்துள்ளனர் என்றும், ஐ.எஸ். இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய குழுக்கள், இதற்குப் பொறுப்பேற்றுள்ளன என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது.

இந்தப் பொழுதுபோக்கு வளாகத்தில், கடைகள், உணவகங்கள், பயணியர் விடுதிகள் போன்றவை உள்ளன.

இதற்கிடையே, தீவிரவாதிகளிடம் பெண்கள், சிறார் என, 200க்கும் மேற்பட்டோர் பிணையல் கைதிகளாக உள்ளனர் என்றும், சிறார் மனிதக் கேடயங்களாகவும், படைவீரர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் ஆயர் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.