2017-06-03 16:03:00

உலகப் பெருங்கடல்கள் பற்றிய முதல் ஐ.நா. மாநாடு


ஜூன்,03,2017. உலகப் பெருங்கடல்கள் நாள், ஜூன் 8, வருகிற வியாழனன்று கடைப்பிடிக்கப்படும்வேளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலகப் பெருங்கடல்கள் பற்றிய முதல் மாநாட்டை வரும் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஜூன் 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், பெருங்கடல்கள் வெப்பமடைந்து வருதல், கடல்வாழ் உயிரினங்களின் அழிவு, பிளாஸ்டிக் பொருள்கள் குவிப்பு போன்ற விவகாரங்கள் பற்றிப் பேசப்படும் என, ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெருங்கடல்களின் நலம் பாதிக்கப்படுவதற்கு, மனிதரின் செயல்களே முக்கிய காரணம் என்றும், இந்தப் பாதிப்பு, ஏழ்மை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, நீடித்த நிலையான வாழ்வாதாரங்களை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பு, உலகளாவிய உணவு பாதுகாப்பு, மனித நலம், காலநிலைச் சமன்பாடு போன்ற நடவடிக்கைகளில் பரவலாக, எதிர்த் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.   

இம்மாநாட்டை முன்னிட்டு, நியு யார்க் நகரில், இஞ்ஞாயிறு மாலையில் உலகப் பெருங்கடல் விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகர், ஏறக்குறைய 520 மைல் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.